பழக்கப்பட்ட துறையில் பாதுகாப்பான பணியைத் தொடர்வதற்குப் பதிலாக, நீண்டகால ஆர்வத்தைத் தொழிலாக மாற்றுவது எளிதான முடிவன்று.
பன்னாட்டு வங்கிகளில் பத்து ஆண்டுகள் பணியாற்றிய திரு வாவு சாகுல் ஹமீது, 52, துணிச்சலான முடிவை எடுத்து உணவுத் துறையில் தொழில்முனைவராகத் தமது பயணத்தைத் தொடங்கினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு அவர் நிறுவிய ‘சுவை ஃபுட்ஸ்’ (Suvai Foods), இன்று சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழிற்சபை (SMCCI) ஃபேர்மான்ட் ஹோட்டலில் நடத்திய அதன் 70ஆம் ஆண்டு நிறைவு விருது விழாவில், ‘எஸ்எம்இ சென்டர் @ எஸ்எம்சிசிஐ எஸ்எம்இ விருது’ (SME Centre @ SMCCI SME Award) வழங்கி திரு சாகுல் கௌரவிக்கப்பட்டார்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இவ்விழாவில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது, வர்த்தகத் தலைவர்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழில் சபையின் 70ஆம் ஆண்டு நிறைவு விருது விழாவில் ‘சுவை புட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் வாவு சாகுல் ஹமீதுடன் (இடது) உரையாடும் அதிபர் தர்மன் சண்முகரத்னம். - படம்: வாவு சாகுல் ஹமீது
தொழில்முனைப்பு, மின்னிலக்க மாற்றம், நிலைத்தன்மை, உலகமயமாதல், சமூகத் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 14 வர்த்தகங்களுக்கும் தலைவர்களுக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவரான திரு சாகுல், 1999ல் பிரிட்டனில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் வந்தார். முன்னணிப் பன்னாட்டு வங்கிகளில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார்.
எனினும், சிறுவயது முதலே சமையற்கலைமீது கொண்டிருந்த ஆர்வம் அவரைத் தொழில் மாற்றம் குறித்துச் சிந்திக்க வைத்தது.
குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவராக உணவுத் துறையில் அடியெடுத்து வைத்ததால், ஆரம்பத்தில் கடுமையான சவால்களை எதிர்கொண்டதாகக் கூறினார் திரு சாகுல்.
“முதல் ஈராண்டுகள் தொழிலைக் கைவிட்டுவிடலாமா என்றுகூடத் தோன்றியது. பெட்ரோல் காரிலிருந்து டீசல் காருக்கு மாறியதுபோல அது முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
இருப்பினும், தமது நிறுவனத்தின் செயற்கைப் பொருள்கள் சேர்க்கப்படாத ஆரோக்கியமான உணவுத் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வரவேற்றது அவருக்குப் புது நம்பிக்கை அளித்தது.
“பணத்தைத் தாண்டி, மக்களின் உணர்வுகளோடு நாங்கள் பிணைக்கப்பட்டிருப்பதை உணரத் தொடங்கினோம்,” என்று திரு சாகுல் கூறினார்.
தொடக்கத்தில் சில தயாரிப்புகளுடன் தொடங்கிய ‘சுவை ஃபுட்ஸ்’, தற்போது 80 முதல் 100 வகையான ஆரோக்கியத் தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்ட ‘சுவை ஃபுட்ஸ்’, இங்கிலாந்து, ஹாங்காங், மலேசியா ஆகிய நாடுகளில் சொந்தத் தயாரிப்பு ஆலைகளைக் கொண்டுள்ளது. நியூசிலாந்துக்கும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
‘சுவை ஃபுட்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் வாவு சாகுல் ஹமீதுக்கு சிங்கப்பூர் மலாய் வர்த்தக, தொழில் சபை ‘எஸ்எம்இ சென்டர் @ எஸ்எம்சிசிஐ எஸ்எம்இ’ விருதை வழங்கியது. - படம்: வாவு சாகுல் ஹமீது
தோசை மாவுத் தயாரிப்பில் தனித்துவம் காட்டும் நோக்கில், வழக்கமான வகைகளுடன் தினை, கினோவா (quinoa), பழுப்பு அரிசி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கும் தோசை மாவு வகைகளையும் நிறுவனம் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது.
அடுத்ததாக, முளைகட்டிய தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘ஸ்லிம் ஃபிட் தோசை’ (Slim-fit dosa) வகையையும் சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
விமான நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கும் ‘சுவை ஃபுட்ஸ்’ உணவுப் பொருள்களை விநியோகித்து வருகிறது.
“நான் இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன். மலாய் வர்த்தக, தொறிழ்சபை என்னை அணுகியபோது ஆச்சரியமடைந்தேன். அவர்கள் என்னை ஒரு விருதுக்கு மட்டுமன்று, ஐந்து வெவ்வேறு பிரிவுகளின்கீழ் பரிந்துரை செய்திருந்தனர்,” என மலாய் வர்த்தக, தொறிழ்சபையிடமிருந்து விருது பெற்றது குறித்து திரு சாகுல் கூறினார்.
வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட வர்த்தக, தொறிழ்சபை தமது உழைப்பை அங்கீகரித்து விருது வழங்கியுள்ளது, சிங்கப்பூரின் பன்முகக் கலாசார நல்லிணக்கத்திற்கும் பரஸ்பர மதிப்பிற்கும் சிறந்த சான்றாகும் என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள அனைத்துச் சமூகத்தினரின் இல்லங்களிலும் ‘சுவை ஃபுட்ஸ்’ தயாரிப்புகள் இடம்பெற வேண்டும் என்பதே திரு சாகுலின் இலக்கு.
குறிப்பாக, தோசை உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்ற அவர், இந்த உணவுக் கலாசாரத்தைச் சிங்கப்பூரின் அனைத்துச் சமூகத்தினரிடமும் கொண்டுசேர்க்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
.png)






English (US) ·