இவ்வாண்டு மொத்தம் 386 இளையர்களுக்குத் தேசிய இளையர் சாதனை தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
சேவைவழி கற்றல், சுய மேம்பாடு, சமூகத் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு ஆகிய கூறுகளில் தங்களின் சாதனைகளை வெளிப்படுத்திய அந்த இளையர்களுக்கு திங்கட்கிழமை (அக்டோபர் 26) தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்தியக் கல்லூரியில் நடந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு டான், விருதுபெற்ற இளையர்களுக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டதோடு தங்கள் சமூகப் பணிகளை அவர்கள் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வர் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறினார்.
“நீங்கள் பெற்றுள்ள தன்னம்பிக்கை உங்களை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்ல ஊக்குவிக்கட்டும். நீங்கள் சேவையாற்றிய மக்கள், அந்தப் படி ஏன் முக்கியமானது என்பதை உங்களுக்கு நினைவூட்டட்டும்.
“அக்கறை நிறைந்த, அனைவருக்குமான சிங்கப்பூரை உருவாக்க நீங்கள் தொடர்ந்து எவ்வாறு பங்களிக்கிவுள்ளீர் என்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார் அவர்.
விருது வென்றவர்களுள் 31 பேருக்கு அவர்களது நற்பணி, சமூகத்தின்மீதும் மக்களின்மீதும் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தைப் பாராட்டி அதிபர் தர்மன் விருதளித்தார்.
அவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி மாணவி பிரார்த்தனா தமிழ்ச்செல்வன், 19, இப்பயணம் தமக்குக் கடினமாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக இருந்ததென பகிர்ந்தார்.
அதிபர் தர்மனிடமிருந்து விருதுபெற்ற பிரார்த்தனா தமிழ்ச்செல்வன் (வலது). நிகழ்ச்சியை பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் (இடது) வழிநடத்தினார். - படம்: சாவ்பாவ்
“எனக்கு இப்பயணத்தின்வழி உதவி தேவைப்படும் பல சமூகங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்ற வேட்கை பிறந்துள்ளது. நிச்சயமாக அதற்கான முயற்சியில் ஈடுபடுவேன்,” என்றார் அவர்.
அவர் இதுவரை அறிவுசார் குறைபாடுடையவர்கள், முன்னாள் குற்றவாளிகள், மூத்தோர் என உதவி தேவைப்படும் பல்வேறு சமூகங்களுடன் சேவைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த ஓராண்டாக சமூகச் சேவையில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வந்த இளையர்களுக்கு இவ்விருது அவர்களது பயணத்தின் முடிவாக அல்லாமல் ஆரம்பமாக விளங்குமென தேசிய இளையர் சாதனை விருது மன்றம் கருதுகிறது.
விருதுபெற்றவர்கள் தொடர்ந்து வெவ்வேறு வகையில் சமூகத்திற்குச் சேவையாற்ற திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுமென மன்றம் உறுதியளித்தது.
1992ல் தொடங்கப்பட்ட இவ்விருது, சேவை, சவால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை, தலைமைத்துவம் ஆகியவற்றின்வழி இளையர்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. இத்திட்டத்தின் மிக உயரிய அங்கீகாரம் தங்க விருதாகும்.
.png)







English (US) ·