சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் இணைந்து நடத்தும் வருடாந்தர சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சி அக்டோபர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்றது.
‘சிம்பெக்ஸ்’ என்றழைக்கப்படும் இந்தக் கடற்பயிற்சி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாக் கடற்பகுதியில் நடைபெற்றது.
இதில் சிங்கப்பூர் தரப்பில் ‘ஆர்எஸ்எஸ் சுப்ரீம்’ போர்க்கப்பலும், இந்தியத் தரப்பில் ‘ஐஎன்எஸ் நீலகிரி’, ‘ஐஎன்எஸ் கமோர்த்தா’ ஆகிய போர்க்கப்பல்களும் ‘சிந்துகோஷ்’ ரக நீர்மூழ்கிக் கப்பலும் ஈடுபட்டன.
பயிற்சியின்போது, இரு கடற்படையினரும் இணைந்து நிபுணத்துவப் பரிமாற்றங்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.
துறைசார் நிபுணத்துவப் பரிமாற்றங்கள் வாயிலாக ஆளில்லா அமைப்புகளின் செயல்பாடுகள், நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு, கடல்சார் வான்வழிச் செயல்பாடுகள் ஆகியவற்றில் தங்கள் செயல்பாட்டு அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
இந்தக் கடல்சார் இருதரப்புப் பயிற்சி 33வது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. - படம்: இந்திய பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி)
பயிற்சியின்போது பீரங்கிச்சூடு, வான் தற்காப்பு, நீர்மூழ்கி எதிர்ப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட மேம்பட்ட போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவை இரு கடற்படைகளின் போர் ஆற்றலை வளர்க்கவும், ஒருங்கிணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும் உதவின.
33வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள இந்தக் கடல்சார் இருதரப்புப் பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால உறவு நிலவுவதைக் காட்டுவதாக ‘ஆர்எஸ்எஸ் சுப்ரீம்’ கடற்படைத் தளபதி கர்னல் பெர்ட்ரம் ஆங் தெரிவித்தார்.
“இந்த நீடித்த தற்காப்பு உறவுக்குச் சிம்பெக்ஸ் சிறந்த சான்றாகும்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், இரு கடற்படைகளும் தங்கள் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், புரிந்துணர்வை வளர்க்கவும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவும் சிம்பெக்ஸ் முக்கியக் களமாக விளங்குகிறது என்றார் அவர்.
1994ஆம் ஆண்டு ‘லயன் கிங்’ என்ற பெயரில் இப்பயிற்சி தொடங்கப்பட்டது. இது பல பரிமாணப் போர்ப்பயிற்சிகளை உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.
கடல் என்பது இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வெறும் புவியியல் அம்சம் அல்ல என்று இந்தியக் கடற்படையின் செயல்பாடுகளுக்கான தலைமை அதிகாரி மனோஜ் ஜா கூறினார்.
“1994ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதுதான் இதன் சிறப்பு,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
.png)






English (US) ·