லிட்டில் இந்தியாவின் தீபாவளி அலங்காரத்தை நினைவுபடுத்தும் வகையில், மார்சிலிங்கிலும் சிறிய அளவில் தீபாவளி ஒளியூட்டு நடைபெற்றது.
எண் 31 மார்சிலிங் ரைஸ் சாலையில் மூன்றாவது ஆண்டாக விமரிசையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அப்பகுதி மக்கள் பெருந்திரளாக ஒன்றுதிரண்டு கண்டுகளித்தனர்.
தீபாவளி அலங்காரத்தில் மிளிரும் 31 மார்சிலிங் ரைஸ் சாலை. - படம்: விஷ்ருதா நந்தகுமார்
சனிக்கிழமை (அக்டோபர் 24) மாலை ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் ஏறத்தாழ 200 குடியிருப்பாளர்கள் ஒன்றுதிரண்டு, கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்து, சைவ விருந்துண்டு சாலைகளில் அமைக்கப்பட்ட தீபாவளி அலங்காரத்தைக் கண்டுகளித்தனர்.
மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சருமான ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஒளியூட்டைத் தொடக்கிவைத்தார்.
மார்சிலிங் வணிகர்கள், உணவங்காடிக்காரர் சங்கத்தின் ஆதரவோடு, மார்சிலிங் மக்கள் கழக அடித்தள அமைப்புகள், மார்சிலிங் குடிமக்கள் ஆலோசனைக் குழு, அதன் சமுதாய மேம்பாட்டு நல நிதி ஆகியவை இணைந்து ‘தீபாவளிப் பரிசு’ எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
தீபாவளிப் பரிசாக ஒளியூட்டில் கலந்துகொண்ட குடியிருப்பாளர்களுக்கு $50 ஷெங் சியோங் பேரங்காடிப் பற்றுச்சீட்டுகளும் பண்டிகைப் பலகாரங்களும் வழங்கப்பட்டன.
பண்டிகைக் காலத்தில் குறைந்த வருமானம் உடையோருக்கு உதவும் சிங்கப்பூரர்களின் ஒற்றுமை உணர்வை இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்துவதாக திரு ஸாக்கி கூறினார்.
“இன நல்லிணக்கத்தை நாம் ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனவே, குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து மற்றவர்களின் கலாசாரத்தைக் கொண்டாடுவதில் உள்ள ஒற்றுமையைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைவரும் தூய்மையான சூழலில் பண்டிகையைக் கொண்டாட வழிவகுக்கும் வகையில், ஒளியூட்டுக்கு முன்பு, 16 குடும்பங்களின் வீடுகளைச் சுத்தம் செய்ய தொண்டூழியர்கள் உதவினர்.
நான்கு பிள்ளைகளுடன் ஆறு பேர் கொண்ட குடும்பமாக வாழும் 39 வயது தனலெட்சுமி கிருஷ்ணனும் அவரது கணவர் 43 வயது விஜய்குமார் ராமச்சந்திரனும், காலையிலேயே நான்கு தொண்டூழியர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்ய உதவியது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகக் கூறினர்.
“இந்நிகழ்ச்சி மட்டுமின்றி சமூக அமைப்புகள் எங்கள் குடும்பத்திற்குப் பல வழிகளில் உதவி வாழ்வை எளிதாக்கி வருகின்றன,” என்று அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
அண்டைவீட்டாரோடு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 50 வயது திருமதி கலாவிற்கு மார்சிலிங் குடியிருப்பாளர்களோடு சேர்ந்து கொண்டாடும் இரண்டாவது தீபாவளி இது.
“இதுபோன்ற முயற்சிகள் எளிய குடும்பங்களுக்கு உண்மையான பண்டிகை உணர்வையும் மகிழ்ச்சியையும் கொண்டுவந்து சேர்க்கின்றன,” என்றார் அவர்.
கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கைகொடுப்பது முக்கியம். எதிர்காலத்திலும் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை விரிவுபடுத்த முயல்வோம்,” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவர் குபேர குமார், 29, உறுதியளித்தார்.
.png)






English (US) ·