தோக்கியோ: ஜப்பானில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி இளையர்களின் குற்றச் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக ஒன்றிணையும் பதின்ம வயதினர், காவல்துறையினரைக் குறிவைத்துக் குறும்புச்செயல்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.
ஜூன் 4ஆம் தேதி அதிகாலையில், அய்சி வட்டாரத்தில் உள்ள கசுகாய் காவல் நிலையத்திற்கு வெளியே மூன்று சைக்கிள்களில் வந்த 15 முதல் 16 வயதுடைய ஆறு பதின்ம வயதினர், காவல் வாகனம் மீதும் அதிகாரிகள் மீதும் முட்டைகளை வீசி எறிந்துவிட்டுத் தப்பிச் சென்றனர்.
‘போலி-ஓனி’ (Poli-oni) என்று அழைக்கப்படும் ஓடிப்பிடிக்கும் விளையாட்டைப் போன்ற செயலில் ஈடுபட்ட அறுவரையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் காவல்துறை கைது செய்தது.
இத்தகைய சம்பவங்கள் மியாகி, ஹையோகோ ஆகிய பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. சிலர் பட்டாசுகளைக் காவல் சாவடிகளுக்குள் வீசியதுடன், கண்காணிப்பு வாகனங்கள் தங்களைத் துரத்தும் காணொளிகளை ‘டிக்டாக்’ செயலியில் பதிவிட்டுள்ளனர்.
வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்கள் இணையத்தில் ஒன்றுகூடுவதால், அவர்களைக் கண்காணிப்பது கடினமாக உள்ளதாகக் கல்வி அதிகாரிகளும் காவல்துறையும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் குற்றவியல் சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட இளையர்களின் எண்ணிக்கை 1980களில் உச்சத்தில் இருந்து, கொவிட்-19 காலத்தில் 2021ல் 14,818 என்ற குறைந்தபட்ச அளவை எட்டியது. ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உயர்ந்து, 2025ல் 24,416 ஆக அதிகரித்துள்ளது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மீதான நடவடிக்கைகளும் 2020ல் 5,086 ஆக இருந்து, 2025ல் 9,178 ஆக உயர்ந்துள்ளது.
சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் மட்டுமே இதற்குத் தீர்வாகாது என்றும், தனிமை உணர்வால் தவறான வழியில் செல்லும் பிள்ளைகளுக்குக் குடும்பத்திலும் சமூகத்திலும் நம்பிக்கையான மனிதர்களின் ஆதரவு அவசியம் என்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
.png)






English (US) ·