சிட்னி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்த ஜெசின்டா ஆர்டென்

11 hours ago 1

சிட்னி: நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசின்டா ஆர்டென், ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பேராசிரியர் பணியில் சேர்ந்துள்ளார்.

அங்கு, ‘அனுதாபமுள்ள தலைமைத்துவம்’ என்ற பாடத்தை மாணவர்களுக்கு அவர் கற்பிக்கவிருக்கிறார்.

நியூசிலாந்தில் கொவிட்-19 பெருந்தொற்றைத் திறம்படக் கையாண்டார் 46 வயது ஆர்டென். ஆனால், கிருமிப்பரவலை முடக்க அவர் விதித்த கட்டுப்பாடுகளை மக்கள் பெரிதும் வரவேற்கவில்லை.

அதையடுத்து, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலிலிருந்து அவர் விலகினார்.

பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த ஆர்டென், 2026ஆம் ஆண்டு சிட்னியின் வடக்குக் கடற்கரைப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்.

“சிட்னி பல்கலைக்கழகத்தில் இணைவதில் மகிழ்ச்சி. பிரதமர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தலைமைத்துவம் குறித்த கேள்விகள்மீது கவனம் செலுத்தத் தொடங்கினேன்,” என்று திருவாட்டி ஆர்டென் தெரிவித்தார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆர்டென் பயிற்சிப் பேராசிரியராக இம்மாதம் இணைந்து விரிவுரைகள், மாஸ்டர் வகுப்புகள் போன்றவற்றில் ஈடுபடுவார்.

அனுதாபமுள்ள தலைமைத்துவம், சமூகப் பிணைப்பு, குடிமை நம்பிக்கை ஆகியவற்றில் திருவாட்டி ஆர்டென் கவனம் செலுத்துவார் என்றும் அனைத்துலக, நற்பண்புகள் அடிப்படையிலான தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான புதிய அணுகுமுறைகளை அவர் மேம்படுத்துவார் என்றும் சிட்னி பல்கலைக்கழகம் தெரிவித்தது.

Read Entire Article