மன்னார்குடி மீத்தேன் திட்டத்திலிருந்து ஜிஇஇசிஎல் நிறுவனம் விலகல்: காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

1 hour ago 1

Last Updated:Oct 24, 2026 8:02 PM IST

இந்த முடிவு குறித்து இயற்கை ஆர்வலர் சேதுராமன் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் அளித்த பேட்டியில், "இது எங்களது நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" எனப் பெருமிதத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

News18
News18

மன்னார்குடி நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்திலிருந்து 'கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்' (GEECL) நிறுவனம் முற்றிலுமாக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காவிரி டெல்டா விவசாயிகளின் பல ஆண்டு கால தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களை மையமாகக் கொண்டு நிலக்கரி படுகை மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசும் ஜிஇஇசிஎல் நிறுவனமும் தொடங்க முயற்சித்தன. மன்னார்குடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் ஏறக்குறைய 600 முதல் 1,500 அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி அடுக்குகளிலிருந்து மீத்தேன் வாயுவை எடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

ஆனால், இத்திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக வீழ்ச்சியடையும், கடல்நீர் நிலத்திற்குள் புகும் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாகப் பாழாகும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். 2012 ஜனவரியில் திருவாரூரில் நடைபெற்ற மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பைப் பதிவிட்டனர். இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார் உள்ளிட்டோரின் வழிகாட்டுதலில் பல விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. இதன் விளைவாக, 2013-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார்.

இத்திட்டம் குறித்து ஆராய அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் வல்லுநர்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழு சமர்ப்பித்த இறுதி அறிக்கையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏறக்குறைய 426 ஏக்கர் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படும்,  25 ஆண்டுகால முழு ஆயுட்காலத்தில் தினசரி ஒரு லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்., 667 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் எரிவாயுக் குழாய் வலை அமைப்பும், வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் கழிவு வாயுக்களும் சுற்றுச்சூழலுக்கும் காற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், 2015 செப்டம்பரில் தமிழக அரசு இத்திட்டத்திற்கு நிரந்தரத் தடை விதித்தது. இத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனதால் ஏற்பட்ட இழப்புகளுக்காக மத்திய அரசிடம் 1,735 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ஜிஇஇசிஎல் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்ற மத்தியஸ்தக் குழுவிடம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதில், நிறுவனத்தின் கோரிக்கையை மத்தியஸ்த தீர்ப்பாயம் முற்றிலுமாக நிராகரித்து, நிறுவனம் உண்மையில் செய்த செலவுகளுக்காக வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வழங்க உத்தரவிட்டது. அதேவேளையில், முடிக்கப்படாத பணிகளுக்காக ஜிஇஇசிஎல் நிறுவனத்திடம் மத்திய அரசு கோரிய 30 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டு மனுவையும் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

இத்தீர்ப்பைத் தொடர்ந்து, மன்னார்குடி மீத்தேன் திட்டத்திலிருந்து முற்றிலுமாக விலகுவதாக ஜிஇஇசிஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த முடிவு குறித்து இயற்கை ஆர்வலர் சேதுராமன் மற்றும் காவிரி டெல்டா விவசாயிகள் அளித்த பேட்டியில், "இது எங்களது நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி" எனப் பெருமிதத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Read Entire Article