Last Updated:Oct 24, 2026 9:07 PM IST
பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 225 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் அர்லேகர், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவரின் ஆளுமையும், துணிவும் என்றும் நினைவுகூரப்படும் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதேபோன்று முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், மருது சகோதரர்களின் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சர் விஜய் பசும்பொன் வருகைதர இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று கூறினார். மருது சகோதரர்களின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை செலுத்தினார்.
விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை, வருகிற அக். 30 ஆம் தேதியில் பசும்பொன்னில் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு ஆட்சியிலும் முதல்வர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். தொடர்ந்து, ராமநாதபுரம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
.png)







English (US) ·