தீவெங்கும் 3,200 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்புப் பைகள்

1 hour ago 1

சிங்கப்பூர் முழுவதும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களுடன் தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆண்டுதோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் முழுவதும் தீவெங்கிலும் உள்ள 101 இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் மூலம் ஏறத்தாழ 3,200 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை (அக்டோபர் 24) பிற்பகல் 3 மணியளவில் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 புளோக் 240B பகுதியில் நடைபெற்றது. இதில் ஏறத்தாழ 30 தொண்டூழியர்கள் கலந்துகொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த 135 குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்று அன்பளிப்புப் பைகளை வழங்கினர்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கிரேஸ் ஃபூ, நற்பணிப் பேரவையின் தலைவர் ரவீந்திரன் கணேசன், தொண்டூழியர்கள்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கிரேஸ் ஃபூ, நற்பணிப் பேரவையின் தலைவர் ரவீந்திரன் கணேசன், தொண்டூழியர்கள். - படம்: நற்பணிப் பேரவை

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான கிரேஸ் ஃபூ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ஜூரோங் ஈஸ்ட்-புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான திருவாட்டி ஃபூ, தொண்டூழியர்களுடன் இணைந்து குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளை வழங்கி, அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தில்அமைச்சர் கிரேஸ் ஃபூ  (வலமிருந்து இரண்டாமவர்), நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன் (இடது) இருவருடன் அடித்தளத் தலைவர்களும் இணைந்து குடியிருப்பாளர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பைகளை வழங்கினர்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தில்அமைச்சர் கிரேஸ் ஃபூ (வலமிருந்து இரண்டாமவர்), நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன் (இடது) இருவருடன் அடித்தளத் தலைவர்களும் இணைந்து குடியிருப்பாளர்கள் வீட்டிற்கு நேரில் சென்று பைகளை வழங்கினர். - படம்: நற்பணிப் பேரவை

சுகாதார மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் வழங்கப்படும் அன்பளிப்புப் பைகளில் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், சுவையான பலகாரங்கள், வீடுகளை ஒளிமயமாக்கும் அலங்கார மின்விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பண்டிகைக்குத் தேவையான பொருள்களை ஒரே தொகுப்பாகப் பெறுவதன் மூலம் குடும்பங்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட இத்திட்டம் வழிவகுக்கிறது.

பரிசுப் பைகளில் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், சுவையான பலகாரங்கள், வீடுகளை ஒளிமயமாக்கும் அலங்கார மின்விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பரிசுப் பைகளில் ஆரோக்கியமான உணவுப் பொருள்கள், சுவையான பலகாரங்கள், வீடுகளை ஒளிமயமாக்கும் அலங்கார மின்விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. - படம்: நற்பணிப் பேரவை

தீபாவளி, ஒளி இருளை வெல்வதுபோல நன்மையை உணர்த்தும் பண்டிகை என்று குறிப்பிட்ட திருவாட்டி ஃபூ, இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குப் பண்டிகை மகிழ்ச்சியும் அன்பின் செய்தியும் கொண்டு சேர்க்கப்படுவதாகக் கூறினார்.

“தொண்டூழியர்களின் நேரடித் தொடர்பும் பிறருக்குக் கொடுக்கும் மனப்பான்மையும் இக்கொண்டாட்டத்திற்குத் தனிச் சிறப்பு சேர்க்கின்றன,” என்றார் அவர்.

இத்திட்டம் பண்டிகைக் கொண்டாட்டத்தைத் தாண்டி, உதவி தேவைப்படும் குடும்பங்கள் சமூகத்தால் நினைவுகூரப்படுவதையும் அவர்கள் பண்டிகைக் காலத்தில் தனிமைப்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக நற்பணிப் பேரவையின் தலைவர் ரவீந்திரன் கணேசன் கூறினார்.

இத்தகைய முயற்சிகள் மக்கள் கழகத்தின் ‘பிஏ2030’ தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப, அக்கறையுள்ள, ஒன்றிணைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தில் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன், மற்ற அடித்தளத் தலைவர்கள் இணைந்து குடியிருப்பாளர்கள் வீட்டிற்கே நேரில் சென்று பைகளை வழங்கினர்.

தீபாவளி அன்பளிப்புப் பைகளை விநியோகிக்கும் திட்டத்தில் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நற்பணிப் பேரவை தலைவர் ரவீந்திரன் கணேசன், மற்ற அடித்தளத் தலைவர்கள் இணைந்து குடியிருப்பாளர்கள் வீட்டிற்கே நேரில் சென்று பைகளை வழங்கினர். - படம்: நற்பணிப் பேரவை

யூஹுவா பகுதியில் கடந்த எட்டாண்டுகளாகத் தொண்டூழியம் செய்துவரும் 56 வயது மனிதவள அதிகாரி உமா முருகையன், சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதில் கிடைக்கும் மனநிறைவே தம்மைத் தொடர்ந்து தொண்டூழியத்தில் ஈடுபடத் தூண்டுவதாகக் கூறினார்.

“இத்தகைய தொண்டூழிய நடவடிக்கைகளின் மூலம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுசேர்க்க முடிவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர்.

அன்பளிப்புப் பைகளைத் தயாரிப்பதற்கான பணிகள் நிறைவளித்ததாக இந்நிகழ்ச்சியின் திட்டப் பொறுப்பாளரும் 25 ஆண்டுகளாக அடித்தளத் தலைவராகச் செயல்பட்டு வருபவருமான 53 வயது ஆசிரியர் மணி பெரியசாமி கூறினார். பொருள்களை வாங்குவது முதல் அவற்றை அன்பளிப்புப் பைகளில் அடுக்கி வைப்பது வரை ஒவ்வொரு கட்டத்திலும் தொண்டூழியர்கள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

“பாரம்பரியப் பலகாரங்களுடன் வீடுகளை அலங்கரிப்பதற்கான மின்விளக்குகளையும் வழங்கியுள்ளோம். குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைத்து, குழந்தைகளின் முகங்களில் புன்னகையை வரவழைப்பதே எங்கள் நோக்கம்,” என்றார் திரு மணி.

அன்பளிப்புப் பைகளைப் பெற்றுக்கொண்டவர்களின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியே தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி எனக் குறிப்பிட்ட அவர், அனைவரும் இணைந்து செயல்படும்போது சிறிய நற்செயல்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்றார்.

Read Entire Article