ரயில் ஊழியர்கள் முறையான தொழிற்கல்வியைப் பெறுவதற்கு ஏதுவாக ஐந்து கல்வி நிறுவனங்களுடன் சிங்கப்பூர் ரயில் பயிற்சிக்கழகம் இணைந்து செயல்படவுள்ளது.
தொழிற்துறையில் வழங்கப்படும் பணியிடைப் பயிற்சியும் தொழில் சார்ந்த சான்றிதழ்களும் பட்டயக் கல்வி, பட்டப் படிப்புகளுக்குப் பயன்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்விக் கழகம், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி, ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை அதில் இணைகின்றன.
இந்தப் பங்காளித்துவம் தொடர்பான அறிவிப்பை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் மாணவர்கள், பொதுப் பேருந்து, ரயில் துறைகளில் பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்களின் திறமைகளை வளர்க்க நடத்தப்படும் ‘மாபெரும் சவால்’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான ஜெஃப்ரி சியாவ் வெளியிட்டார்.
நவம்பர் மாதம் முதல் சிங்கப்பூர் ரயில் பயிற்சிக்கழகத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் விரிவான மறுசீரமைப்பின் ஓர் அங்கமாக இது அமையும். இதன்மூலம், நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகியவற்றின் பயிற்சிகள் நவம்பர் மாதம் முதல் பொதுப் பாடத்திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்படும்.
அதனால், மாணவர்கள் இத்துறையில் எளிதாக நுழையவும் ஊழியர்கள் உயர் கல்வித் தகுதிகளை வளர்த்துக்கொள்ளவும் முடியும் என சனிக்கிழமையன்று (அக்டோபர் 24) நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் கட்டமைப்பு விரிவடைந்து தொழில்நுட்பம் வளரும் வேளையில், ஊழியரணியை வலுப்படுத்த எடுக்கப்படும் ஆக முக்கியமான நடவடிக்கை இது எனப் பயிற்சிக்கழகத்தின் நிர்வாக முதல்வர் லியூ யீ டெர் குறிப்பிட்டார்.
மேலும், பராமரிப்பு, இயக்கப் பணிகளில் தலைசிறந்து விளங்கும் ஊழியர்களை அங்கீகரிக்கத் துறை சார்ந்த சான்றளிப்புத் திட்டம் உருவாக்கப்படும்.
ஊழியரணியில் 20 விழுக்காட்டினரை இத்திட்டத்தின்கீழ் அங்கீகரிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் இலக்கு கொண்டுள்ளது.
பொறியாளர்கள் மட்டுமன்றித் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் தொழிற்பயிற்சிகள் விரிவுபடுத்தப்படும். உள்ளூர், வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவும் இதற்கு வழிகாட்டுதல் வழங்கும்.
பொதுப் போக்குவரத்து முறை தொடர்ந்து உருமாறி வருவதால் ஊழியர்களின் பொறுப்புகளும் கூடியுள்ளதாகத் தெரிவித்த திரு சியாவ், பழைய வழித்தடங்களைப் புதுப்பிக்கும் முக்கியப் பணிகளுக்காகவே திட்டமிட்ட ரயில் சேவை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.
மேலும், புதிய வழித்தடங்களைத் திறப்பதைவிட தற்போதுள்ள தடங்களைப் பராமரித்து மேம்படுத்துவதற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இத்தகைய பணிகளைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் செய்துமுடிக்கத் திறமையான பொறியாளர்களும் தொழில்நுட்பப் பணியாளர்களும் தேவைப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
.png)







English (US) ·