அனுபவம், புதிய கண்ணோட்டம் கொண்ட குழுவுடன் பணியாற்ற பிரதமர் வோங் ஆவல்

55 minutes ago 1

மக்கள் செயல் கட்சியின் (மசெக) மாநாடு, கட்சித் தலைமைத்துவப் புதுப்பிப்புக்கு ஒரு முக்கிய நிகழ்வு என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெறும் கட்சிக் கூட்டத்தை முன்னிட்டு, அவர் அந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

சமூக ஊடகத்தில் அக்டோபர் 24ஆம் தேதி பதிவேற்றம் செய்த காணொளிச் செய்தியில், “எதிர்காலப் பணிகளுக்குக் கட்சியை நாம் தயார்படுத்திவரும் வேளையில், அனுபவத்தையும் புதிய கண்ணோட்டத்தையும் கொண்டுவரும் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு இருக்கிறேன்,” என்றார் பிரதமர் வோங்.

கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு வோங், புதுமுகங்களை இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் உட்பட கட்சியின் புதிய தலைமைத்துவக் குழுவின் உத்தேசக் கட்டமைப்பு குறித்துத் தெரிவித்த முதல் கருத்துகள் இவை.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அந்த மாநாட்டில், கட்சியின் மத்திய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் இடம்பெறும்.

அங்குக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று பிரதமர் வோங் தெரிவித்தார். 2000க்கும் மேற்பட்ட ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், பொதுவாக மத்திய செயற்குழுவிற்கு 12 வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர். அதன் பிறகு, அடுத்தடுத்து அதிக வாக்குகள் பெறும் இருவரை மத்திய செயற்குழு தன்னுடன் இணைத்துக்கொள்ளும்.

புதிய மத்திய செயற்குழு பொதுவாக மேலும் நால்வரை இணைத்துக்கொண்டு, அதிகபட்ச வரம்பான 18 உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக அமையும்.

2025 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியின் 27 முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், மத்திய செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான முதல் வாய்ப்பாக இது அமையும்.

சென்ற ஆண்டின் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சி மாநாடு இது என்பதையும் பிரதமர் வோங் தமது பதிவில் குறிப்பிட்டார்.

Read Entire Article