மதுரை: அக். 27-
மதுரை மேலூர் அருகே சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவனுடன் விளையாடிய சக சிறுவனையும், அவரது தாய் சந்தியாவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேலூர் அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியகருப்பன்–சத்யா தம்பதியின் மகன் முத்துவேல் (7). மூன்றாம் வகுப்பு படித்து வந்த அவர், பள்ளி விடுமுறை நாளில் வீட்டின் அருகே மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பெரியகருப்பன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், சத்யா கூலி வேலைக்குச் செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சத்யா, மகன் வீட்டில் இல்லாததை அறிந்து உறவினர்களுடன் தேடினார். நண்பர்களிடமும் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. இதையடுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிணறுகள், வயல்வெளிகள், புதர்கள் உள்ளிட்ட இடங்களில் தேடினர். பின்னர், அருகிலிருந்த பாழடைந்த வீட்டில் முத்துவேலின் சடலம் மீட்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. விசாரணையில், முத்துவேலும் மற்றொரு சிறுவனும் நண்பர்கள் என்பதும், இருவரும் ஒன்றாக விளையாடி வந்ததும் தெரியவந்தது. கழுத்தை இறுக்கினால் மயங்கி மீண்டும் எழுந்துவிடலாம் என்பதை எங்கேயோ பார்த்த அந்த சிறுவன், அடைக்கலம் காத்த அம்மன் கோயில் அருகே கயிற்றால் முத்துவேலின் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் முத்துவேலின் நாக்கு வெளியே வந்து தடுமாறியதால் அச்சமடைந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டான். தண்ணீர் கேட்டு அந்த சிறுவனின் வீட்டுக்குச் சென்ற முத்துவேல் அங்கு சரிந்து விழுந்து உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையறிந்த சந்தியா, தனது மகனைக் காப்பாற்ற முத்துவேலின் சடலத்தை பாழடைந்த இடத்தில் போட்டதாகவும், போலீஸாரிடமும் பெற்றோரிடமும் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதாரத்தை அழிக்க முயன்றதாக சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துக்கு பின்னணி அல்லது உள்நோக்கம் இல்லை; விளையாட்டு விபரீதமாக மாறியதாக தேவநாதன் தெரிவித்தார்.