அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் உடல்நலம் குன்றிய விமானச் சிப்பந்தி ஒருவருக்கு, அதே விமானத்தில் பயணம் செய்த முன்னாள் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர் முதலுதவி அளித்துக் காப்பாற்றினார்.
சீனாவின் செங்டூ நகரிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட ‘எஸ்கியூ843’ ரக விமானத்தில் இரவு 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஷின்மின் நாளிதழ் தெரிவித்தது.
விமானம் வானில் இருந்தபோது மருத்துவ ஊழியர்களின் அவசர உதவி கோரி ஒலிபெருக்கியில் முதல் அறிவிப்பு செய்யப்பட்டது. எனினும், விமானத்தில் வேறு மருத்துவர்கள் யாரேனும் இருப்பார்கள் என்ற எண்ணத்தினாலும், நீண்ட காலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றாத தயக்கத்தினாலும் தாம் உடனடியாக முன்வரவில்லை என்று நிக்கோல் கே என்ற அந்தப் பெண் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். \
தொடர்ந்து இரண்டாவது முறையாக அவசர உதவி கேட்டு அறிவிப்பு செய்யப்பட்ட பிறகே அவர் உதவ விரைந்தார். அங்கு சென்று பார்த்தபோது, இளவயது விமானச் சிப்பந்தி ஒருவர் தரையில் சோர்வடைந்து கிடந்தார்.
அவரது கைகளும் கால்களும் குளிர்ந்து போயிருந்தன. நாடித்துடிப்பைச் சோதித்தபோது அது மிக பலவீனமாக இருந்தது. அரை மயக்க நிலையிலிருந்த அவரால் ஒழுங்காகப் பேசவோ பதிலளிக்கவோ இயலவில்லை. தமக்குக் குமட்டலாக இருப்பதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
உடனடியாகச் செயல்பட்ட அந்தப் பெண், மற்ற விமானச் சிப்பந்தியிடமிருந்து இதயத் துடிப்பளவி கேட்டுப் பெற்று, அவரது ரத்த அழுத்தம், ரத்தத்தில் உயிர் வாயு அளவு, ரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சோதிக்க உதவிகோரினார்.
பரிசோதனைக்குப் பின், அவருக்கு நரம்பு வழியாகச் செலுத்தப்படும் மருந்துச் சொட்டுநீர் அவசியம் தேவை என்பதை அவர் அறிந்தார். அவரது நரம்புகளைக் கண்டறிவது சவாலாக இருந்தபோதிலும், உதிரிக் குழாய்களைத் தயார்நிலையில் வைத்திருக்குமாறு கூறிவிட்டு நரம்பு வழியாக முதல் முயற்சியிலேயே அவர் வெற்றிகரமாகப் பொருத்தினார். அவசர சிகிச்சைப் பிரிவில் தாம் பணியாற்றிய பல ஆண்டுகால அனுபவம் வீண்போகவில்லை என்பதில் தாம் பெருமகிழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
.png)







English (US) ·