தேசிய அளவில் தமிழ்நாடு நம்பர்-1... மாநில அளவில் இராமநாதபுரம் நம்பர்-1... என்ன ஸ்பெஷல் தெரியுமா? | Ramsar Sites

1 hour ago 1

ராம்சார் அங்கீகாரம் என்றால் என்ன? ஈரானின் 'ராம்சார்' நகரில் 1971-ல் கையெழுத்தான பன்னாட்டு ஒப்பந்தத்தின்படி, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் சிறப்புமிக்க ஈரநிலங்களுக்கு 'ராம்சார் தளம்' என்னும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் 2014-ல் வெறும் 26-ஆக இருந்த ராம்சார் தளங்களின் எண்ணிக்கை, தற்போது 103-ஆக விரிவடைந்துள்ளது. இதில் 20 தளங்களுடன் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உத்தரப் பிரதேசம் உள்ளது.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், காவிரி படுகை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக ராம்சார் தளங்கள் அமைந்துள்ளன. இராமநாதபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, அரியலூர், நீலகிரி, விழுப்புரம், திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சர்வதேச தளங்கள் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் தற்போது வரை ராம்சார் தளங்கள் அறிவிக்கப்படவில்லை.

பொதுவாக இராமநாதபுரம் என்றால் வறட்சியான மாவட்டம் என்றே பலர் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 6 ராம்சார் தளங்களைக் கொண்டுள்ள பெருமை இராமநாதபுரம் மாவட்டத்தையே சாரும். மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க்கோளக் காப்பகம் (Gulf of Mannar Marine Biosphere Reserve) சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் , கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம்,  தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் ஆகிய 6 தளங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுளள்ன. வலசை வரும் பல்லாயிரக்கணக்கான பறவைகளுக்கும், அரிய கடல்வாழ் உயிரினங்களுக்கும் புகலிடமாக விளங்கி, இராமநாதபுரம் மாவட்டத்தின் சூழலியல் நிலப்பரப்பை இவை செழுமைப்படுத்துகின்றன.

சாதாரண ஏரிகள் மற்றும் குளங்களைத் தாண்டி, தமிழ்நாட்டில் மிகவும் தனித்துவமான சூழல் அமைப்பைக் கொண்ட ராம்சார் தளங்கள் உள்ளன.  உதாரணமாக, நீலகிரியின் லாங்வுட் சோலை என்பது மலைப் பகுதியில் அமைந்துள்ள மிக அரிய 'சோலைக் காடு'வகையைச் சேர்ந்த ஈரநிலத் தளம். சென்னையின் பள்ளிக்கரணை சதுப்புநிலம் என்பது  நகர்ப்புறத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் ஒரே நன்னீர் சதுப்புநிலத் தளம் ஆகும். அலையாத்திக் காடுகள்  நிறைந்த உலகப் புகழ்பெற்ற சதுப்புநிலப் பகுதியாக  பிச்சாவரம் விளங்குகிறது.

தமிழ்நாட்டின் ராம்சார் தளங்கள் சர்வதேச அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளான பல அரிய உயிரினங்களின் முதன்மை வாழ்விடமாகத் திகழ்கின்றன. மிக அரிதான, அழிவின் விளிம்பில் உள்ள கடல்வாழ் பாலூட்டியான கடல் பசு (Dugong - Critically Endangered), பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்வெளிகளின் உறைவிடமாக மன்னார் வளைகுடா விளங்குகிறது. மத்திய ஆசிய வான்வழிப் பாதையில் பயணிக்கும் சர்வதேச வலசைப் பறவைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக கழுவேலி, கூந்தன்குளம் தளங்கள் திகழ்கின்றன.

தமிழ்நாட்டின் முதல் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது கோடியக்கரை ஆகும். 2002ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் பிக்பெரிய தொய்வு ஏற்பட்டது.  2021-ல் தமிழ்நாடு அரசு 'தமிழ்நாடு ஈரநில இயக்கம்' என்ற பிரத்யேகக் கொள்கை முயற்சியைத் தொடங்கி ஈரநிலப் பாதுகாப்பில் பெரும் முயற்சியை மேற்கொண்டது. இதன் பலனாக 2022 முதல் 2024 வரையிலான குறுகிய காலத்தில் பிச்சாவரம், பள்ளிக்கரணை, கழுவேலி, மன்னார் வளைகுடா உள்ளிட்ட 19 புதிய இடங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது. 20 ராம்சார் தளங்களுடன் இந்தியாவிலேயே அதிக ராம்சார் இடங்களைக் கொண்ட முதன்மை மாநிலமாக சாதனை படைத்தது.

Read Entire Article