Last Updated:Oct 27, 2026 11:00 AM IST
7 வயது சிறுவன், பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்னவென்பது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன், பாழடைந்த வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்னவென்பது தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேதனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் – சத்தியா தம்பதியின் மகன் முத்துச்செல்வம், வெள்ளலூரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு சிறுவன் சென்றுள்ளார். ஆனால், மாலை வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், திங்கட்கிழமை அதே பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் கிடந்த முத்துச்செல்வத்தின் சடலத்தை மீட்டுள்ளனர். சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையில் விசாரணை நடத்தினர். சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், சிறுவனின் உடலை மறைத்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக மற்றொரு சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் விரிவான விசாரணையில், அக். 25ம் தேதி அன்று காலை 11 மணியளவில் கோவில் அருகே உயிரிழந்த சிறுவன் முத்துசெல்வமும், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
அப்போது விளையாட்டாக, மற்றொரு சிறுவன் உயிரிழந்த சிறுவனின் கழுத்தில் கயிற்றை இறுக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் இருந்து தப்பிக்க ஓடியபோது உயிரிழந்த சிறுவனுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், கோவில் சுவரில் வாய் மோதியதில் முன்பக்கப் பற்கள் சேதமடைந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், அந்தச் சிறுவன் மற்றொரு சிறுவனின் வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த மற்றொரு சிறுவனின் தாய் சந்தியா (32) முன்னிலையில், சிறுவன் முத்துச்செல்வன் கீழே விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் உயிரிழந்ததை அறிந்த சந்தியா, தனது மகனின் செயலால் ஏற்பட்ட சம்பவத்தை மறைப்பதற்காகவும், அதுதொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நோக்கிலும், சிறுவனின் உடலை தனியாமங்கலத்தைச் சேர்ந்த ராஜாங்கத்திற்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் மறைத்து வைத்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மற்றொரு சிறுவனின் தாயை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
.png)








English (US) ·