புகைமூட்டம்: அதிகாரிகளுடன் ஒத்துழைக்க 3 சிங்கப்பூர் நிறுவனங்கள் இணக்கம்

1 hour ago 1

சிங்கப்பூரின் புகைமூட்டச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வக் கடிதங்கள் அனுப்பப்பட்ட 10 சிங்கப்பூர் நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள், இந்தோனீசியக் காட்டுத்தீயுடன் தங்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் கோரியுள்ள விவரங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை (அக்டோபர் 24) பிற்பகல் 2 மணி நிலவரப்படி, ‘வில்மார் இன்டர்நேஷனல்’, ‘புமிதாமா அக்ரி’, ‘ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ்’ ஆகிய நிறுவனங்கள் அந்தக் கடிதங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் அவற்றுக்கு இணங்கிச் செயல்படத் திட்டமிட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் பங்குச் சந்தை (எஸ்ஜிஎக்ஸ்) ஆவணங்களில் தெரிவித்துள்ளன.

தேசிய சுற்றுப்புற அமைப்பின் உத்தரவுகளுக்கு இணங்கப்போவதாக முதலில் வில்மார் இன்டர்நேஷனல் அக்டோபர் 23ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் அறிவித்தது. சட்டபூர்வக் கடிதங்கள் கொடுக்கப்பட்டதாகத் தேசிய சுற்றுப்புற அமைப்பு அறிவித்த கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அந்நிறுவனம் அதனைத் தெரிவித்தது.

அக்டோபர் 24ஆம் தேதி அதிகாலை 1.15 மணிக்குத் தாக்கல் செய்த ஆவணத்தில், தேவையான விவரங்களை வழங்கத் தான் ஒப்புக்கொண்டுள்ளதாக ஃபர்ஸ்ட் ரிசோர்சஸ் தெரிவித்தது. அந்நிறுவனத்தின் செயலாளர் விக்டர் லாய் குவான் லூங் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, புமிதாமா அக்ரியும் அதன் துணை நிறுவனங்களும் அக்டோபர் 24ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்குத் தாக்கல் செய்த ஆவணத்தில், அமைப்பு கோரியுள்ள ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கப்போவதாகக் குறிப்பிட்டன.

அதில் அதன் நிர்வாகத் தலைவரும் தலைமை நிர்வாகியுமான லிம் குணவான் ஹரியான்தோ கையொப்பமிட்டிருந்தார்.

மற்ற ஏழு நிறுவனங்கள் அந்தக் கடிதங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

அந்தப் பத்து நிறுவனங்களும் இந்தோனீசியாவில் நில உரிமங்களைக் கொண்டுள்ளன அல்லது அத்தகைய உரிமங்கள் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை வைத்துள்ளன என்று அமைப்பு தெரிவித்தது.

Read Entire Article