பிள்ளை வளர்ப்பு: உயிரியல் பிணைப்பைக் கடந்த அன்பு

1 hour ago 2

காமாட்சி சந்திரசேகரன்

ஈன்றெடுத்த குழந்தைகளுக்குக் கொடுக்கும் அதே அன்பையும் அரவணைப்பையும் தாம் பெறாத பிள்ளைகளுக்கும் அளித்து வளர்க்க விரும்பும் பெற்றோர்க்காகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வளர்ப்புப் பராமரிப்பு நிகழ்ச்சியைச் சனிக்கிழமை (அக்டோபர் 24) நடத்தியது.

பல்வேறு காரணங்களுக்காகப் பிறந்த குடும்பத்திடமிருந்து விலக வேண்டிய சூழலுக்குப் பிள்ளைகள் பலர் தள்ளப்படுகின்றனர். வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தின் வழியே தலைமுறைகள் கடந்து பல குடும்பங்கள் அக்குழந்தைகளைத் தங்கள் இல்லங்களில் வரவேற்று, அடைக்கலமும் ஆதரவும் வழங்கி வருகின்றன. இவ்வாண்டு, அத்திட்டத்தின் 70வது ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், மேலும் பலரை வளர்ப்புப் பெற்றோராக ஊக்கப்படுத்தவும் சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் அந்நிகழ்ச்சி நடந்தேறியது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங் கலந்துகொண்டார். வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வண்ணம், “சமுதாயமும் குடும்பங்களும் அரசாங்கத்தோடு இணைந்து முயற்சி செய்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் நம்மால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்,” என்றார் அவர்.

வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் இணைய ஆர்வத்தோடு வந்திருந்தோருக்கு, வளர்ப்புப் பெற்றோரின் பயணத்தைப் பிரதிபலிக்கும் மூன்று குறுநாடகங்கள் நிகழ்ச்சியில் மேடையேற்றப்பட்டன.

வளர்ப்புப் பெற்றோரின் அனுபவங்களைப் படம்பிடித்துக் காட்டியதோடு, திட்டத்தைப் பற்றிப் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் நடிகர்கள் நேரடியாகப் பதிலளித்தனர்.

வளர்ப்புப் பெற்றோராகத் திகழ விரும்பியோருக்கு மேலும் ஊக்கமளிக்கவும் தகவல்கள் வழங்கவும், அனுபவம் கொண்ட பெற்றோருடனான கலந்துரையாடல் அங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திரு சத்தியநாதன் நடராஜா, 71, கல்வித்துறையில் சேவையாற்றி ஓய்வுபெற்றவர். வளர்ப்புப் பெற்றோராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு இந்த வளர்ப்புப் பராமரிப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

“சிங்கப்பூரில் வளர்ப்புப் பெற்றோருக்கான அவசியம் இருப்பதைப் பற்றி நான் கேள்வியுற்றபோது எனக்கும் அதில் ஆர்வம் பிறந்தது. இந்நிகழ்ச்சியின்வழி, அரசாங்கம் வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கும் ஆதரவுகளைப் பற்றி அறிந்துகொண்டேன்,” என்றார் திரு சத்தியநாதன்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் நீண்ட நாள் வளர்ப்புப் பெற்றோராகச் சேவையாற்றியோரில் ஒருவர், 86 வயதான திருமதி சாரதா. 1976லிருந்து சேவையாற்றி வந்த இவர், 2020ல் வளர்ப்புப் பெற்றோராக ஆற்றி வந்த தம் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

இருப்பினும், கைக்குழந்தையிலிருந்து அவர் வளர்த்த பிள்ளையான ஜான் (உண்மைப் பெயரன்று), தன் 31வது வயதிலும் தொடர்ந்து திருமதி சாரதாவுடன் வசித்து வருகிறார். தம்மை நாடி வந்த குழந்தைகளுடன் திருமதி சாரதா வளர்த்துக்கொண்ட பாசமிகு உறவின் ஆதாரமாக இந்தப் பிணைப்பு திகழ்கிறது.

திருமதி சாரதாவின் 50ஆண்டுச் சேவையில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர் வளர்ப்புப் பெற்றாராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

குறைமாதக் குழந்தை ஒன்றுக்கு அடைக்கலம் கொடுத்ததிலிருந்து அவரது இந்தப் பயணம் தொடங்கியது. நண்பரின் பரிந்துரையில் திருமதி சாரதா வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் இணைந்தார்.

“பெரும்பாலும் மூளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட பிள்ளைகளையே வளர்த்தேன். ஆனால், குழந்தைகள் மீதான என் பிரியம் அனைத்துச் சவால்களையும் மறக்கடித்துவிட்டது. என் பயணம் பேரின்பத்தை அளித்த ஒன்றாகவே இருந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

திருமதி சாரதாவின் கணவரும் அவருக்கு இதில் கைகொடுத்தார். அந்தத் தம்பதியர்க்குச் சொந்தமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர். சொந்தக் குழந்தைகளைப் போலவே வளர்ப்புப் பிள்ளைகளையும் பொறுப்புடனும் பொறுமையுடனும் அவர்கள் வளர்த்தனர்.

“குழந்தைகளின் வெகுளியான அன்பு கொடுத்த இன்பத்தைவிடப் பல மடங்கு அதிகமான வருத்தத்தை நான் அனுபவித்தேன். ஒவ்வொரு முறையும் அவர்களை மீண்டும் உகந்தவர்களிடம் ஒப்படைக்கும்போது வருந்தினேன்,” என்று கண்ணீர் மல்கக் கூறினார் திருமதி சாரதா.

வளர்ப்புப் பெற்றோராக விரும்புவோர் கட்டாயம் பொறுமையைக் கடைப்பிடித்து, எந்தப் பின்னணியிலிருந்து வரும் குழந்தையானாலும் அதை அரவணைக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் திருமதி சாரதா அறிவுறுத்துகிறார்.

Read Entire Article