ஆம்ஸ்டர்டாம்: இந்தியா, அமெரிக்கா இடையேயான முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து, ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக நெதர்லாந்தில் இந்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்தில் நடைபெற்ற இந்திய-நெதர்லாந்து வர்த்தக மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பெரும்பாலான விவாதங்களைத் தாங்கள் முடித்துவிட்டதாகவும் அதில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான விதிகளை மெருகேற்றி, இறுதி செய்யும பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அண்மையில் தெரிவித்த கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திரு கோயலின் உரை அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
சில குறிப்பிட்ட விவகாரங்கள் மட்டுமே தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் விரைவில் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாகவும் ரூபியோ குறிப்பிட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புதிய வரிகள், கொள்கை மாற்றங்கள் காரணமாக கூடுதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவைப்பட்டன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தத் தீவிர ஆலோசனைகள் மூலம், விவசாயப் பொருள்கள், தொழில்துறை உற்பத்திப் பொருள்கள், சந்தை அணுகல் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவின் விரிவடைந்து வரும் வர்த்தக ஈடுபாட்டைச் சுட்டிக்காட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்தியா ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில், இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என்றும் ஏற்றுமதி, தொழில் முதலீடுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்றும் பொருளியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அமைதியை விரும்பும் இந்தியர்கள்
இதனிடையே, வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் எப்போதுமே சட்டம் ஒழுங்கை மதித்து, அமைதியான வழியைக் கடைப்பிடித்து வருவதாக திரு பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இந்தியச் சமூகத்தினரிடையே உரையாற்றிய அவர், ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக போராட்டங்கள் வெடிப்பதையும் அவை சில இடங்களில் வன்முறையாக மாறுவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
“ஐரோப்பா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் தற்போதைய சூழலிலும் இந்திய மக்கள் எங்கு சென்றாலும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதில்லை. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்காமல், தங்களின் குடும்ப நலனுக்கும் சமூக அமைதிக்கும் முன்னுரிமை அளிக்கின்றனர்.
“சட்டம் ஒழுங்கை மதித்து ஒற்றுமையுடன் வாழ்வதே வெளிநாடுகளில் இந்தியர்களுக்குப் பெரும் வரவேற்பையும் மரியாதையும் பெற்றுத் தந்துள்ளது,” என்றார் திரு பியூஷ் கோயல்.
.png)








English (US) ·