புதுடெல்லி, அக். 25-
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், முடிவெடுக்கும் நடைமுறைகள் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆய்வு செய்ய, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் இருப்பதாகக் கூறப்படும் குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அல்லது முன்னாள் நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளும் அந்தக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எடுத்த முடிவுகளுக்கு எதிராக, மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் விஷால் திவாரி தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தத் தகவல்களின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அதன் முடிவெடுக்கும் முறை மற்றும் தொடர்புடைய பணிகள் குறித்து விரிவான ஆய்வு தேவைப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.