“பாலியல் வன்கொடுமையா..? போதைப் பொருள் நடமாட்டமா..? இரண்டுக்கும் தான் போட்டியே..” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

1 hour ago 1

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று, மணவிழாவை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பினை வழங்கிய மணமக்களுக்கும் - மணமக்களின் குடும்பத்தாருக்கும், இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இங்கு அனைவரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். இது நம்முடைய கழகக் குடும்பத்தில் நடைபெறும் திருமணம். இன்னும் நான் பெருமையோடு உரிமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய இல்லத்தில் நடைபெறும் திருமணமாகக் கருதி, இது நம்முடைய குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக கருதி, இந்த மணவிழா நிகழ்ச்சியில் நாமெல்லாம் கலந்து கொண்டிருக்கிறோம்.

நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆரை பற்றி அனைவரும் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்கள். அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நேரத்தில் இருந்து, இந்த நிமிடம் வரையில், அவர் இந்த இயக்கத்திற்காக என்னென்ன வகையில் பாடுபட்டு இருக்கிறார், பணியாற்றி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரை அனைவரும் ‘அண்ணாச்சி’ என்றுதான் அழைப்பார்கள். காரணம், அவர் யாரைப் பார்த்தாலும் ‘அண்ணாச்சி, அண்ணாச்சி’ என்றுதான் சொல்வார். ஏதாவது பணியை, செய்தியை அவரிடத்தில் சொன்னால், ‘சரி அண்ணாச்சி, சரி அண்ணாச்சி’ என்று 10 இடத்திலாவது அந்த ‘அண்ணாச்சி’ என்ற வார்த்தையைச் சொல்லி, ஒரு விஷயத்தைச் சொல்லுவார்.

ஏதோ, முதியவர்கள் இடத்தில் மட்டுமல்ல. அது ஐந்து வயது குழந்தையாக இருந்தாலும், மூன்று வயது குழந்தையாக இருந்தாலும், பிறந்த குழந்தையாக இருந்தாலும், அதையும் பார்த்து அண்ணாச்சி அண்ணாச்சி என்று சொல்லக்கூடியவர். அவரை பொறுத்தவரையில், அவருக்கென்று ஒரு நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கை இருக்கிறது. அதைத்தான் சொன்னார்கள், அண்ணாச்சி என்ற தனி அடையாளம் அவருக்கு உண்டு. இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், 1977-இல் இருந்து தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றும் ஆற்றலைப் பெற்றவர், நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய தலைமையின்கீழ் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து பணியாற்றி இருக்கிறார். நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பணியாற்றிச் சிறப்பாகப் பெயர் பெற்றிருக்கிறார். அதேபோல், என்னுடைய தலைமையில் திராவிட மடல் ஆட்சி அமைந்த போது, வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி, சிறப்புக்குரிய இடத்தை அவர் பெற்றிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒரு அமைச்சர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்களில் அவரும் ஒருவர் என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும். அவர் வருவாய்த்துறை அமைச்சராக இருந்து பணியாற்றியபோது, நாங்கள் என்ன சொன்னாலும், அந்தக் காரியத்தை உடனுக்குடன் முடித்துத் தரும் ஆற்றலை அவரிடத்தில் நாங்கள் பெற்றோம். நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில், தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து, கழகத் தோழர்கள் மட்டுமல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல. அமைச்சர்களே என்னிடத்தில் தொடர்ந்து ஒரு கோரிக்கை வைத்து வந்தார்கள். அது என்ன என்று கேட்டால், பட்டா பிரச்சினை. அந்தப் பட்டா பிரச்சினை இன்னும் தீராமல் இருக்கிறது. அதுதான் பெரிய கோரிக்கையாக இருந்து கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது உடனடியாக வழங்க வேண்டும் என்று எல்லோரும் என்னிடத்தில் தொடர்ந்து எடுத்துச் சொன்னார்கள். அவ்வாறு சொல்லுகிற போது, அதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை எல்லாம் பற்றிக் கூட எடுத்துச் சொன்னார்கள்.

இதையும் படிங்க: மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் தனுஷ்… அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை?

அந்தச் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்று சொன்னால், அமைச்சரவையைக் கூட்டி, அந்த அமைச்சரவையில் தீர்மானம் போட்டு, அதைச் சரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தபோது, நம்முடைய அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தொடர்ந்து என்னிடத்தில் விடாப்பிடியாக வலியுறுத்தி, பின் தொடர்ந்து, அந்தப் பணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம் என்று சொன்னால், அதற்கு முழு காரணம் அமைச்சராக இருந்த நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்பதை, நான் பெருமையோடு தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தமிழ்நாட்டில் இதுவரையில் வரலாற்றிலே இல்லாத அளவிற்குப் பட்டா பிரச்சனையை பொறுத்த வரைக்கும், நம்முடைய ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 23 லட்சத்து 56 ஆயிரத்து மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கிறது என்பது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது, நம் மாநிலத்தில் மட்டும்தான். அதற்குக் காரணம், நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அது மட்டுமல்ல, மழைக்காலம் வருகிறபோது, அந்தப் பேரிடர் துறையை கண்காணித்தவர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மழை எப்போது வரும்? வெள்ளம் எப்போது வரும்? என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், நான் பல நேரங்களில் குறிப்பிட்டுச் சொன்னது உண்டு. என்னவென்று கேட்டால், பெரிய மருது - சின்ன மருது என்று. பெரிய மருதுவாக நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆரும், சின்ன மருதுவாக நம்முடைய தங்கம் தென்னரசுவும் இணைந்து, அந்த மாவட்டத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக நான் கழகத்தின் சார்பிலும், என்னுடைய சார்பிலும், அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதை என் கடமையாகக் கருதுகிறேன்.

ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால், முதல் பேட்டியில் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டார்கள், “ஆட்சிக்கு வரப் போகிறீர்கள், ஏதாவது செய்தி சொல்ல முடியுமா?” என்று கேட்டபோது, நான் சொன்னேன், ‘வாக்களித்தவர்கள் மட்டுமல்ல. வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று வருத்தப்படும் அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும். அந்தப் பணியை நான் நிறைவேற்றுவேன்” என்று சொன்னேன். ஆனால் இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டால், ‘வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல. வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’. அதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ரீல்ஸ் ஆட்சி என்பது, வாக்களிக்காத மக்கள் மட்டும் அல்ல. இன்றைக்கு வாக்களித்த மக்களும் புலம்பிக் கொண்டிருக்கும் சூழல் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நிலை என்னவென்று கேட்டால், விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நிர்வாகம் சீர்குலைந்து போயிருக்கிறது. பாலியல் குற்றங்கள் இன்றைக்குத் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. தினம், பத்திரிகையை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்தாலும் சரி, சோசியல் மீடியா பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம் என்று செய்தி இல்லாத நாளே இன்றைக்கு நாட்டில் இல்லை. இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் செய்தி தொடர்ந்து ஐந்து, ஆறு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது. மின்தடை ஒரு பக்கம். ‘சிங்கப்பெண்’ என்று ஒரு படையை உருவாக்கினார்கள். அந்த சிங்கப்பெண் படையைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டிய நிலைதான் இன்றைக்கு நாட்டில் உருவாகி இருக்கிறது.

நான் சில நாட்களுக்கு முன்பு சொன்னேன். முதலமைச்சராக இருக்கக்கூடியவர், “இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி” என்று சொன்னார். “இல்லை, இல்லை; மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி” என்று சொன்னேன். அது இன்றைக்கு மாறி, பாலியல் வன்கொடுமையா? போதைப் பொருள் நடமாட்டமா? என்று, அந்த இரண்டுக்கும் இடையே தான் இன்றைக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது. மேடைக்கு மேடை அவர் என்ன கத்துகிறார் என்றால், ‘தீய சக்தி, தீய சக்தி’ என்ற புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர். மருமகன் டாக்டர் அருண்குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், எப்போதுமே நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்., என்னதான் தனக்கு மகன்கள் இருந்தாலும், அவருடைய மகன்களை எல்லாம் தாண்டி, அதிகமான பாசத்தை நம்பிக்கையை நம்முடைய அருண்குமார் மீதுதான் வைத்திருக்கிறார் என்பதை, நான் பலமுறை பல நேரங்களில் உணர்ந்தது உண்டு.

எனவே அப்படிப்பட்ட அருண்குமார், இன்றைக்கு மருத்துவராக இருந்து, ஒரு சிறப்புக்குரிய இடத்திற்கு இன்றைக்கு வந்து கொண்டிருக்கிறார். அவருக்கும் இந்த நேரத்தில் என் வாழ்த்துகளைச் சொல்லி, ‘வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள்’. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்”, மணமக்கள் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி, இந்த நல்ல நேரத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.” என்று பேசினார்.

Read Entire Article