Last Updated:Oct 24, 2026 6:52 PM IST
சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் நினைவேந்தல் விழாவில் பங்கேற்ற டிடிவி தினகரன், தமிழக அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில், மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 225-வது நினைவேந்தல் விழாவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று அவர்களது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த நிலையில், தற்போதைய ஆட்சி மக்களுக்கு பேரிடராக அமைந்துள்ளது. திரை நிழலில் கதாநாயகனாகத் திகழ்ந்தவர், நிஜத்தில் வில்லனாக மாறி வருவதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது; விரைவில் மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள். அரிசி, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ரேஷன் அரிசியைப் பாலிஷ் செய்து மீண்டும் விநியோகிப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரிசி விலை உயர்வு தவெக அரசுக்கு ஆபத்தாக முடியும்.
கடந்த ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறி மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள், தற்போது தவெக நிர்வாகிகள் சிலர் போதைப்பொருள் விற்பனை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். இத்தகைய விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும், தமிழகத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. தூய்மையான ஆட்சியை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
அமைச்சர் நிர்மல்குமார் அதிமுகவை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தங்களது கருத்துகளைப் பொதுவெளியில் தெரிவிப்பதைத் தவிர்த்து, கட்சித் தலைமையுடன் பேச வேண்டும். திமுகவும் அதிமுகவும் ஒருபோதும் இணைந்து செயல்பட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவளித்தால் பாஜகவுக்கு ஆதரவளித்தது போல் ஆகிவிடும் என்பதற்காக பின் வாங்கினர். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிந்த பிறகு திருமாவளவனை முதல்வராக்க எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் முயற்சி செய்தோம்.
திமுக, அதிமுக கட்சிகள் இணைவதாகக் கூறி விஜய் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அவரது அரசியல் முகம் வெளிப்படத் தொடங்கியுள்ளது என்றும் விமர்சித்தார். தற்போதைய ஆட்சி கடந்த ஆட்சியை விடச் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அடிமட்டத்திலிருந்து ஊழலும் அடாவடிகளும் நிறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், இந்த ஆட்சிக்கு வலுவான அடித்தளம் இல்லை என்றும், விரைவில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.
.png)







English (US) ·