ரியாத், அக். 25-
மேற்காசிய நாடான ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, அந்நாட்டில் விமானப் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் விமான நிலையங்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர். தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரியாத் மற்றும் தம்மாமை இணைக்கும் தங்களது விமான சேவைகளை ரத்து செய்வது நவம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பயணச்சீட்டு முன்பதிவின்போது வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் மூலம், விமான சேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ரத்து குறித்த தகவல்கள் பயணிகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. எனவே, பயணிகள் விமான நிலையத்துக்கு புறப்படுவதற்கு முன்பு, ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விமானத்தின் தற்போதைய நிலையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனிடையே, ரியாத் நகருக்கான இண்டிகோ விமான சேவைகள் வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா நகரங்களுக்கான இண்டிகோ விமானங்களும் அக்டோபர் 27-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரியாத்துடன் இணைக்கும் விமானச் சேவைகளுக்கான தடையை நவம்பர் 30-ம் தேதி வரையிலும், ஜெட்டாவுடன் இணைக்கும் விமானச் சேவைகளுக்கான தடையை நவம்பர் 10-ம் தேதி வரையிலும் நீட்டித்துள்ளதாக அகசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.