
பெங்களூர், அக். 24- போக்சோ வழக்குகளில் சிறு வயது பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவது அவர்களின் மனநலனை கடுமையாக பாதிக்கும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிதிக்காக நடக்கும் சட்டப் போராட்டம் குழந்தைகளுக்கு மற்றொரு வேதனையான அனுபவமாக மாறக்கூடாது என்று நீதிபதி என். நாகபிரசன்னா தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம், 12 வயது சிறுமியை மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க வேண்டுமென்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நியாயமான விசாரணைக்கு உரிமை இருப்பது உண்மைதான் என்றாலும், அதற்காக மைனர் சிறுமியின் மனநலனை ஒருபோதும் அலட்சியம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவம் நடந்த நாள்களை மீண்டும் மீண்டும் நினைவுகூருமாறு கட்டாயப்படுத்துவது சிறுமிக்கு கடுமையான மன உளைச்சலையும், மீளா அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்து குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சாட்சிக் கூண்டில் ஏற்றுவது குழந்தையை கூடுதல் துயரத்திற்குள்ளாக்கும் என்று பெஞ்ச் எச்சரித்துள்ளது. உண்மை கண்டறிவது நீதிமன்றத்தின் நோக்கமாக இருந்தாலும், அதற்காகக் குழந்தையின் மீது தொடர்ச்சியான மன அழுத்தத்தை திணிப்பது முறையல்ல.
போக்சோ சட்டம் பிரிவு 33(5) விளக்கம்:
போக்சோ சட்டத்தின் பிரிவு 33(5)-ன் படி, சிறார் பாதிக்கப்பட்டவர்களை சாட்சியமளிக்கத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு அலையவிடுவதில்லை என்பதை சிறப்பு நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நினைவூட்டியுள்ளது. சாட்சிகளை மீண்டும் அழைத்து விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பினும், அதை எல்லா வழக்கிலும் கண்மூடித்தனமாகப் பயன்படுத்தக் கூடாது; அந்த மறுவிசாரணை உண்மையான தீர்ப்புக்கு இன்றியமையாததா அல்லது விசாரணையை தாமதப்படுத்தவும், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரிசெய்யவுமான தந்திரமா என்பதை நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் கவுரவம், பாதுகாப்பு மற்றும் மனநலப் பாதுகாப்பே நீதித்துறையின் முதன்மையான கடமையாகும்.
வழக்கின் பின்னணி:
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமிக்கு 8 வயது இருந்தபோது, அதாவது கடந்த 2022-ஆம் ஆண்டு அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டம் பதியப்பட்டு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சிறுமியிடம் நீண்ட நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில், சில காணொளிகள் மற்றும் குரல் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுமியை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி 2024 மார்ச்சில் குற்றம் சாட்டப்பட்டவர் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணை நீதிமன்றம் அனுமதித்திருந்த நிலையில், அதை எதிர்த்து சிறுமியின் தாய் தொடர்ந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கிள்ளது.
.png)
1 hour ago
1






English (US) ·