கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணை!

51 minutes ago 1

Last Updated:Oct 31, 2026 1:37 PM IST

கயல்விழிக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News18
News18

எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு பகுதியில் எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் பழுதடைந்த மின்தூக்கியை பழுதுபார்ப்பது தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் கயல்விழி அழகிரியின் பிரதிநிதியைத் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்காத காரணத்தினால் கயல்விழி அழகிரியிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அடையாறு வங்கி கிளைக்கு வந்து கிளை மேலாளரிடம் பேசி உள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கை கன்னத்தில் அறைந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து கயல்விழி அழகிரி வங்கி கிளைக்கு நேரில் வந்து கிளை மேலாளரை அவதூறாகப் பேசி, அறைந்து தாக்கி மிரட்டியுள்ளார் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனக்கெதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கயல்விழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், வங்கி மேலாளர் தான் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதை, மறைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கயல்விழி தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் இறுதி அறிக்கையை நான்கு வாரங்களில் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினருக்கு உத்தரவிட்டார்.

Read Entire Article