பாலர் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்

55 minutes ago 1

சிங்கப்பூரில் ஆண் பாலர் பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டு கிட்டத்தட்ட  190ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 300 ஆக உயர்ந்தது.

இந்த எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 60 விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும், சிங்கப்பூரின் 1,800 பாலர் பள்ளிகளில் பணிபுரியும் 28,000 ஆசிரியர்களில் ஆண் ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 1 விழுக்காடு மட்டுமே உள்ளனர். 

அந்த ஆசிரியர்களில் ஒருவரான முஹம்மது அலிஃப் முகமது முராத் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு பாலர் பள்ளி ஆசிரியராக பணிபுரியத் தொடங்கியபோது, அவரது இந்தத் தேர்வு குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே ஆச்சரியத்தையும் கேள்விகளையும் எழுப்பியது. 

பெண்கள் அதிகம் நிறைந்த ஒரு துறையில் அவர் சந்திக்கவிருக்கும் சவால்கள் குறித்து சிலர் அக்கறைப்பட்டனர்.

சந்தேகங்கள் அத்துடன் நிற்கவில்லை. ஓர் ஆண் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிப்பது குறித்து சில பெற்றோர்கள் தயங்கினர். 

“அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கசப்பான ஓர் அனுபவமாக இருந்தது,” என்று அலிஃப் கூறினார்.

ரிவர்வேல் கிரசண்டில் உள்ள ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ பள்ளியில் பணியாற்றும் 33 வயதான இந்த முதன்மை ஆசிரியருக்கு, சிறுவர்களும் சிறுமிகளும் என்ன செய்ய முடியும்; என்ன செய்ய முடியாது என்று நினைப்பதை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக ஆசிரியர் தொழில் அமைந்தது.

சில குழந்தைகள் அவரிடம், ஆண்களும் ஆசிரியர்களாக இருக்க முடியுமா? என்றுகூடக் கேட்டுள்ளனர்.

“ஏன் முடியாது? (உங்களுக்கு ஆசிரியராக இருப்பதில்) எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களுக்கு உதவவும் கற்றுக்கொடுக்கவுமே நான் இங்கு இருக்கிறேன்,” என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் எட்டு ஆண்டுகளாகக் கற்பித்து வரும் திரு அலிஃப்.

Read Entire Article