ரூ. 40,000 கோடியில் 8 நவீன போர்க்கப்பல்களைக் கட்டமைக்க இந்தியா முடிவு

1 hour ago 1

புதுடெல்லி: மிக விரைவில் ரூ.40,000 கோடி மதிப்பீட்டில், எதிரி ரேடார்களில் சிக்காத (ஸ்டெல்த்) எட்டுப் போர்க்கப்பல்களை உருவாக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் அத்திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியது.

இந்தியக் கடற்படையின் தற்காப்பு, தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், அக்கப்பல்களைத் தயாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தம், கோல்கத்தாவைச் சேர்ந்த ஜிஆர்எஸ்இ (GRSE), கோவா ஷிப்யார்ட் ஆகிய பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட உள்ள போர்க்கப்பல்கள் மணிக்கு ஏறக்குறைய 55 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. எதிரிகளின் ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் ‘ஸ்டெல்த்’ வடிவமைப்புடன், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு, கடற்கரைப் பாதுகாப்புப் பணிகளில் அவை முக்கியப் பங்காற்றும்.

இந்தியக் கடற்படையால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள திட்டத்தில், 70 விழுக்காட்டுக்கும் அதிகமான உள்நாட்டுப் பொருள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அம்முடிவு இந்திய அரசின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ (தற்சார்பு இந்தியா) கொள்கைக்குப் பெருமளவில் வலுசேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பெருமளவில் வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர ஆயிரக்கணக்கான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கடற்படையின் கண்காணிப்புத் திறனை அதிகரிக்க இக்கப்பல்கள் பெரும் பாலமாக இருக்கும் என்று துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முதல் போர்க்கப்பல் கட்டும் பணி அடுத்த ஓராண்டுக்குள் தொடங்கி, 2030ஆம் ஆண்டுக்குள் கடற்படையில் முறைப்படி இணைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article