Last Updated:Oct 24, 2026 10:37 PM IST
நீலகிரியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் அரசுப் பேருந்து சிக்கிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மலைப் பகுதியை கனமழை புரட்டி போட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவில் இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், ராட்சத மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தன. அதிகபட்சமாக பர்லியார் பகுதியில் 25 சென்டி மீட்டரும், கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 20 சென்டி மீட்டர் மழை அளவு பதிவானதில் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பத்து இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதில், பர்லியார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது பழுதாகி நின்ற அரசுப் பேருந்து சிக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்தார். நடந்துநர் சேசவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்லியார் பகுதியில் போக்குவரத்து முடங்கிய நிலையில் ராட்சத கிரேன் உதவியுடன் 10 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அரசுப் பேருந்து மீட்கப்பட்டது.
இதனிடையே, மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் பிக்அப் வாகனம் ஒன்றும் அடித்து செல்லப்பட்டது. மேலும், சுற்றுலா வந்த கேரளாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் மீட்பு படையினர் கயிறு கட்டி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், உதகை தீட்டுக்கல் பகுதியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் மற்றும் 6 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அப்போது, காவலாளி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்.மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் கமலி ஆகியோர் மீட்புப் பணிகளை முடிக்கிவிட்டனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் கோத்தகிரி வழியாக வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அனைத்து சுற்றுலாத்தலங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்தார். இதையடுத்து, தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் உதகை மலை ரயில் சேவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
.png)








English (US) ·