"சிறுமி பணத்திற்காக விற்கப்பட்டாரா?" சிபிசிஐடி விசாரணையில் திடீர் திருப்பம்..

1 hour ago 1

Last Updated:Oct 24, 2026 10:40 PM IST

சிபிசிஐடி போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் சிறுமி குறித்த தகவல் வெளிவருமா.. செஞ்சியில் என்ன தான் நடக்கிறது?

செஞ்சியில் காணாமல்போன 7 வயது சிறுமி
செஞ்சியில் காணாமல்போன 7 வயது சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சிறுமி காணாமல் போனது தொடர்பாக உள்ளூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தடயங்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை மாலை சிறுமியின் தாய் பவானியை மட்டும் அருகிலுள்ள அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி அதிகாரிகள், சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது சிறுமி காணாமல் போனது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பி, துருவித் துருவி விசாரித்துள்ளனர். இந்த விசாரணை முழுவதையும் சிபிசிஐடி போலீசார் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை சிறுமியின் தாய் பவானி மற்றும் தந்தை வடிவேலு ஆகிய இருவரையும், சிறுமி ஹேமலதா படித்த ஆலம்பூண்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

6 வருடங்களாக கொண்டாடப்படாத சிறுமியின் பிறந்தநாள் இந்த வருடம் மட்டும் ஏன் கொண்டாடப்பட்டது? சிறுமி காணாமல் போன நேரம், வீட்டில் இருந்தவர்களின் நடவடிக்கைகள், சிறுமியைக் கடைசியாகப் பார்த்தது யார், அவர் காணாமல் போனது எப்போது? தெரியவந்தது எப்போது? என பல்வேறு சந்தேகங்கள் பெற்றோரிடம் விசாரிக்கப்பட்டது.

சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டதாக, எதிர்வீட்டில் வசிக்கும் மஞ்சுளா தெரிவித்த தகவலும் விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஊர் சாமியார் , இரவு நேர அழுகுரல், மயான நாய் குரைக்கும் சத்தம் என பல்வேறு கோண விசாரணையிலும் .. இதுவரை சிறுமி ஹேமலதா குறித்த உறுதியான தகவல் கிடைக்காத நிலையில், விசாரணையின் முக்கியக் கட்டமாகப் பெற்றோரிடம் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பணத்திற்காக பெற்றோரே சிறுமியை விற்று விட்டார்களா? என்ற சந்தேகத்தை இது ஆழப்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் மாயமான செஞ்சி சிறுமி குறித்த தகவல்கள், வெட்ட வெளிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article