Last Updated:Oct 24, 2026 10:58 PM IST
இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது பின்னணியில் மேலும் சிலர் செயல்படுகின்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

பொருட்களை வாங்கிவிட்டு 'யூபிஐ' (UPI) செயலியில் பணம் செலுத்திவிட்டதாகப் போலி 'ஸ்கிரீன்ஷாட்' காட்டி, சிறு கடை உரிமையாளர்களை ஏமாற்றி வந்த நூதன மோசடி ஆசாமி சென்னையில் காவல்துறையினரிடம் வசமாகச் சிக்கியுள்ளார்.
சென்னையின் அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ஏராளமான சிறு கடைகளைக் குறிவைத்து இந்த அதிர்ச்சி மோசடி அரங்கேறியுள்ளது. கடைகளுக்கு வாடிக்கையாளரைப் போல வரும் நபர், கையில் நிறைய பொருட்களை வாங்கிய பிறகு, தனது செல்போனில் பணம் செலுத்தியது போன்ற போலி 'ஸ்கிரீன்ஷாட்'டை மட்டும் காண்பித்துவிட்டுப் பொருட்களை எடுத்துச் செல்வார். அதை உண்மை என நம்பி கடைக்காரர்களும் பொருட்களைக் கொடுத்து விடுவர். ஆனால், சிறிது நேரம் கழித்துப் பார்க்கும் போதுதான், வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மை தெரியவரும்.
கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பணியில் இருக்கும் சமயங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது. மேலும், முன்கூட்டியே கடைகளின் கியூஆர் (QR) குறியீடு மற்றும் தள்ளுபடி விவரங்களைக் கவனித்துத் திட்டமிட்டே இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கடையில் மட்டும் சுமார் 30,000 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அண்ணாநகர் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வணிகர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, அரும்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், மற்றொரு பெட்டிக் கடையில் மீண்டும் அதே பாணியில் தனது கைவரிசையைக் காட்ட முயன்ற ஹரிஹரன் என்பவரைக் கடை உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் கடந்த ஒரு மாதமாக போர்ட்டர் செயலி மூலமாகவும் பொருட்களை வாங்கி இத்தகைய போலி ஸ்கிரீன்ஷாட் மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டாரா அல்லது பின்னணியில் மேலும் சிலர் செயல்படுகின்றனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, வாடிக்கையாளர்கள் காட்டும் ஸ்கிரீன்ஷாட்டை மட்டும் வைத்து ஏமாறாமல், தங்களது வங்கிக் கணக்கில் பணம் உண்மையாகவே வரவு வைக்கப்பட்டதை உறுதி செய்த பிறகே பொருட்களை வழங்க வேண்டும் என அனைத்துக் கடை உரிமையாளர்களுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
.png)








English (US) ·