ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் தீமிதித் திருவிழா, பக்தர்களின் மனங்களில் வெளிப்படுத்தும் ஒரு புனிதக் களமாகும்.
முதியவர்கள் மட்டுமன்றி, அண்மைக் காலமாகப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளையர்களும் விரதமிருந்து பூக்குழி இறங்கி வருகின்றனர்.
முதன்முறையாகக் பூக்குழி மிதித்த தருணம், அதற்கான பின்னணியும் இவ்வாண்டின் அனுபவத்தைப் பற்றி இளையர்கள் ஐவர் விவரித்தனர்.
“அப்பா அந்த நேரத்தில் தீமிதிக்கத் தொடங்கினார், அவரைப் பார்த்து நானும் தொடர்ந்து விரதத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். குண்டம் வழக்கம்போல சுட்டெரித்தாலும், அனுபவம் அழகாக இருந்தது,” என்று எண்ணெய், எரிவாயு நிறுவன ஊழியரான அம்ரேஷ் ரமேஷ், 28, கூறினார்.
28 வயது அம்ரேஷ் ரமேஷ். - படம்: பே. கார்த்திகேயன்
தனது 18வது வயதில் முதன்முறையாகக் குண்டத்தில் இறங்கிய இவர், கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து தீமிதித் திருவிழாவில் பங்கேற்று வருகிறார்.
சமையல் கலைஞரான 30 வயது டி. ஹரதேவன், 17 வயதிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து பூக்குழி இறங்கி வருகிறார்.
குடும்ப வளர்ப்பும் ஆலயத் தொடர்பும் இவரை இயல்பாகவே ஆன்மிகப் பாதையில் வழிநடத்தியுள்ளன.
17 வயதிலிருந்து கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து பூக்குழி இறங்கி வருகிறார் 30 வயது டி. ஹரதேவன். - படம்: பே. கார்த்திகேயன்
“சிறுவயது முதலே இந்த ஆலயத்தில் ஊறி வளர்ந்ததால், தீமிதிப்பது எனக்கு இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்த முறையும் அந்த உணர்வு மிகவும் அற்புதமாக இருந்தது,” என்றார் இவர். மருத்துவத் துறையில் தாதியராகப் பணியாற்றும் 27 வயது நவீந்திரனுக்கு, அறிவியலைத் தாண்டிய பக்தி நம்பிக்கை உண்டு.
மருத்துவத் துறையில் தாதியராகப் பணியாற்றும் 27 வயது நவீந்திரனுக்கு, அறிவியலைத் தாண்டிய பக்தி நம்பிக்கை உண்டு. - படம்: பே. கார்த்திகேயன்
2022ஆம் ஆண்டு தெய்வத்திற்கு தன்னால் இயன்ற வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் பூக்குழியில் முதன்முறையாக இறங்கினார்.
“ஆரம்பத்தில் இயல்பான அச்சமும் நடுக்கமும் என்னுள் எழத்தான் செய்தது. எனினும் இவ்வாண்டு கரகம் ஏந்தி வந்தவர்களுடன் இணைந்து நடந்து சென்று குண்டத்தைக் கடந்தது மிகுந்த மனநிறைவை அளித்துள்ளது,” என்றார் அவர்.
தந்தைவழி தனயன்
தமது தந்தை கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாக ஆலயத்தில் தொண்டாற்றி வருவதால், சிறுவயது முதலே அவருடன் இணைந்து வேப்பிலைக் குழு உள்ளிட்ட பணிகளில் உதவிய தனுஷுக்கு தானும் பூக்குழியில் இறங்கி வேண்டுதல் செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் இளவயதிலேயே பிறந்தது. 2021ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் முதல்முறையாகக் குண்டத்தில் இறங்கிய அவர், ஆறாவது முறையாகத் தீமிதித்தார்.
29 வயது தனுஷ், - படம்: பே. கார்த்திகேயன்
“வழக்கமாக மாலை நேரத்தில் இறங்குவேன். ஆனால் இம்முறை கோயில் குழுவினருடன் முதல் 200 பேரில் இறங்கியதால் வழக்கத்தை விடக் குண்டம் சூடாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. இருந்தபோதும், இறைவியின் ஆசியுடன் அனைத்தும் மிகச் சிறப்பாக முடிந்தது,” என்றார் தனுஷ், 29.
தீமிதியன்று பிறந்தநாள்
பாதுகாப்பு அதிகாரியான 28 வயது சங்கர் ராமகிருஷ்ணனுக்கு இத்திருவிழா இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. குடும்பத்து மாமாக்களைப் பார்த்து 2018ல் தீமிதிக்கத் தொடங்கிய இவருக்கு, இத்திருவிழா நாளன்றே தம் பிறந்தநாளும் அமைந்திருந்தது.
“என் பிறந்தநாளில் முதன்முறையாகக் கத்தி தூக்கி சேவை செய்தது எல்லையற்ற மகிழ்ச்சியையும் பேராசியையும் தந்துள்ளது,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
முழுநேர தேசிய சேவையாளரான 21 வயது சசிதரனுக்கு, தந்தை வழியாகச் சிறுவயது முதலே ஆலயத் தொடர்பு கிடைத்தது.
பக்திவழி பயத்தை முறியடித்தார் 21 வயது சசிதரன். - படம்: பே. கார்த்திகேயன்
2022ல் தமது 17வது வயதில் முதன்முதலாகப் பூக்குழியில் இறங்கிய இவர், இப்போது ஆண்டுதோறும் தவறாமல் விரதமிருந்து தீமிதிக்கிறார்.
“முதலில் பயமாக இருந்தாலும் எல்லாம் இறைவியின் செயல் என்று பாரத்தைப் போட்டுவிட்டு நடந்தேன். இப்போது ஒவ்வோர் ஆண்டும் தீமிதிப்பது மனத்திற்குப் பிடித்தமான வழக்கமாகிவிட்டது,” என்றார் அவர்.
பூக்குழியின் சூடு பாதங்களைத் தாக்கினாலும், மனத்திலிருக்கும் இறை நம்பிக்கை அச்சத்தை விலக்கி வழிநடத்துகிறது என்பதே இவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
.png)





English (US) ·