புதுடெல்லி, அக். 24-
டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலுக்கு, தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையான அந்தஸ்து அளிக்கக்கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, வரும் 27-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி வக்கீல் அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “வந்தே மாதரம் பாடல், நமது வரலாறு,
இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பெருமையின் அடையாளமாகும். எந்த குடிமகனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அந்தப் பாடலை அவமரியாதை செய்தால், அது சமூக விரோதச் செயலாக மட்டுமின்றி, நமது உரிமைகளை அழிப்பதாகவும் அமைந்துவிடும். எனவே, ஒவ்வொரு குடிமகனும் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். வேறு யாராவது வந்தே மாதரம் பாடலை அவமதிக்க முயன்றால், அதைத் தடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இதேபோன்ற ஒரு ரிட் மனு நிலுவையில் உள்ளது. எனவே, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு 27-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.