
பெலகாவி/தார்வாட், அக். 31-
ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,500 ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் இன்று அழைப்பு விடுத்திருந்த கர்நாடக பந்த் போராட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.
கர்நாடக பந்த் அழைப்பையடுத்து, எல்லை மாவட்டமான பெலகாவியில் பெருமளவில் ஆதரவு கிடைத்துள்ளது. சிக்கோடி மற்றும் அதணி தாலுகாக்கள் முற்றிலுமாக ஸ்தம்பித்தன. வட கர்நாடகா பகுதி முழுவதிலும் பந்த் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் கர்நாடகாவின் தெற்கு பகுதியில் இந்த பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இன்று காலை சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.
கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள விவசாயிகள், சிக்கோடி-மாலிங்கபூர் பாதையின் நடுரோட்டிலேயே காலை உணவை சமைத்து அரசின் மீது தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிராமப்புறங்களில் விவசாயிகள் சாலையில் முள்செடிகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வாகன போக்குவரத்தை முடக்கினர். சாலைகள் அடைக்கப்பட்டதால், கிராமப்புறங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பந்த் போராட்டத்திற்கு நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நல்ல ஆதரவு கிடைத்தது. வியாபாரிகள் தாமாக முன்வந்து கடைகளை அடைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். காலையிலிருந்தே சிக்கோடி கல்வி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பித்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு அஸ்தமித்தது.
பெலகாவியின் மத்திய பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
144 தடை உத்தரவு
கரும்பு விவசாயிகள் பந்த் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளதால், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் தார்வாட் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புனே தேசிய நெடுஞ்சாலை மறியல் செய்யப்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதி காக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறியல் செய்ய தீர்மானித்துள்ளதால், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக இது உள்ளதோடு, பயணிகளின் அத்தியாவசிய போக்குவரத்து, பொருட்கள் கொண்டு செல்வது, வணிக நடவடிக்கைகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு முக்கிய சாலையாகும். இங்கிருந்து தினமும் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மற்றும் வணிக வாகனங்கள் சென்று வருகின்றன.
அமைதியை பேணும் வகையில் மறு உத்தரவு வரும் வரை புனே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சுப்ளி – அங்கோலா தேசிய நெடுஞ்சாலை, நவலகுந்தா – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலை, சுப்ளி – பல்லாரி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பாகல்கோட்டையிலும் தடை உத்தரவு
ஒரு டன் கரும்புக்கு ரூ. 5,500 ஆதரவு விலை நிர்ணயம் செய்யக் கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று பாகல்கோட்டையிலும் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலையையும் மறிப்போம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பாகல்கோட்டை மாவட்டத்தில் BNS 163 பிரிவின் கீழ் (தடை உத்தரவு) பிறப்பிக்கப்பட்டு, இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகல்கோட்டை மாவட்ட ஆட்சியர் சங்கப்பா இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சித்தார்த் கோயல் அளித்த கடிதத்தின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல், சுங்கச்சாவடி மறியல் மற்றும் போராட்டங்கள் நடத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
.png)
6 hours ago
1







English (US) ·