மனபயம் விலக்கி காரியஸித்தி அருளும் ஆஞ்சநேயர்... புதுச்சேரிக்கு அருகே பிரமாண்ட பஞ்சமுக அனுமன் கோயில்!

14 hours ago 1

அனுமனை வழிபட்டால் நம் துன்பங்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கை. ராம நாமம் சொல்லித் துதிப்பவர்களை ஓடி வந்து காப்பார் ஆஞ்சநேயர். அதுமட்டுமா, 'எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அருள்புரிவேன்’ என்பது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் வாக்கு. ஆஞ்சநேயர் பாரத தேசம் முழுவதும் பல்வேறு ரூபங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அவற்றுள் மிகவும் சிறப்புவாய்ந்தது பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவம்.

அசுரன் ஒருவனை அழிக்க அனுமன் முகம், நரசிம்ம முகம், கருடமுகம், ஸ்ரீவராக முகம், ஸ்ரீஹயக்ரீவ முகம் என பஞ்சமுகத்துடன் காட்சி தந்தாராம் ஶ்ரீஆஞ்சநேயர். அனுமனின் அந்தத் திருமுகங்கள் ஒவ்வொன்றும் திவ்ய பலன்களை அளிப்பது.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

அனுமன் முகம்: கிழக்கு நோக்கியது. பாவங்களைப் போக்கி, தூய சிந்தனையை தரும் இந்தத் திருமுகத்துக்கு வாழைப்பழமும் கடலையும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

நரசிம்ம முகம்: தெற்கு நோக்கியது. சத்ரு பயம் நீக்கி, வெற்றியைத் தரும். இந்த முகத்துக்குப் பானகமும் நீர்மோரும் நைவேத்தியம் செய்வது நலம்.

கருட முகம்: மேற்கு நோக்கியது. தீவினைகளையும் உடலில் உள்ள விஷத்தன்மையையும் அகற்றும். தேன் சமர்ப்பித்து வழிபடு வது சிறப்பு.

ஶ்ரீவராக முகம்: வடக்கு நோக்கியது. கிரகதோஷங்களை நீக்கி, ஐஸ்வரியம் அருளும். இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத் தியம் செய்து வணங்கவேண்டும்.

ஶ்ரீஹயக்ரீவ முகம்: மேல்நோக்கிய இந்தத் திருமுகம் வாக்கு வன்மை, ஞானம், வெற்றி, நல்ல சந்ததி, முக்தி ஆகியவற்றை அருளும். அவல், சர்க்கரை, வெண்ணைய் நிவேதனம் செய்து வழிபடவேண்டும்.

அப்படி ஆஞ்சநேயர் பஞ்ச முகத்துடன் அருளும் தலம் பாண்டிச்சேரி அருகில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உண்டு. பஞ்சவடி என்றால் ஐந்துவித மரங்கள் சூழ்ந்த வனம் என்பது பொருளாகும். முன்னொரு யுகத்தில் அரசு, ஆல், வில்வம், நெல்லி, அசோகம் ஆகிய ஐந்து வித மரங்கள் அடர்ந்த வனமாக இந்தப் பகுதி விளங்கியிருக்கிறது. ரிஷிகளும் முனிவர்களும் இந்தப் பிரதேசத்தில் குடில்கள் அமைத்துத் தங்கி, தவமும் யாகங்களும் நடத்திவந்துள்ளார்கள்.

ராம - ராவண யுத்தத்தில் ராவணன் தோல்வி அடையப்போகும் நிலையில், அவனைக் காப்பாற்ற மயில்ராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகம் தடங்கல் இல்லாமல் முடிந்துவிட்டால், ராம லட்சுமணர்கள் அழிந்துவிடுவார்கள். எனவே, அவனுடைய யாகத்தைத் தடுத்து நிறுத்த ஆஞ்சநேயர் விரும்பினார்.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

ராமபிரானின் உத்தரவு பெற்று மயில்ராவணனின் யாகத்தைத் தடுக்கப் புறப்பட்ட ஆஞ்சநேயர், நரசிம்மர், வராகர், கருடன், ஹயக்கிரீவர் ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். அவர்களும் தங்களுடைய சக்திகளை ஆஞ்சநேயருக்கு வழங்கியதுடன், அவருடைய முகங்களாகவும் திகழ்ந்தனர். இதன் மூலம் மயில்ராவணனை அழிக்கும் ஆற்றலும் அவருக்கு உண்டானது. அவ்வாறு தோற்றம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் திருவடிவத்துடன் திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ள பஞ்சவடி எனும் கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார் அனுமன்.

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்த பூமி. பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்த தலம். இதுகுறித்த பிரச்னம் மூலம் தெரியவர இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோயில் கட்ட முடிவானது. இங்கு பிரமாண்ட ஆஞ்சநேயர் திருமேனியைச் செய்ய வேண்டும் என்று முடிவானபோது செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு செய்து முடித்தனர்.

இங்கு 36 அடி உயர பிரமாண்டத் திருமேனியுடன் ஸ்ரீஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்புரிகிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இந்தத் தலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ ராமபிரானின் பாதுகையும் இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்துச் செல்கிறார்கள்.

இந்த ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு, மன அமைதி மற்றும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

பஞ்சவடி ஆஞ்சநேயர்

பஞ்சவடி ஆஞ்சநேயர்

இங்கு அனைத்து நாள்களும் விசேஷமானவை. குறிப்பாக புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஸ்ரீஅனுமனை வழிபட ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். மாதந்தோறும் அமாவாசை தினத்திலும், கேட்டை மற்றும் மூல நட்சத்திர நாளிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. அதேபோல், ஶ்ரீராம நவமி திருநாளிலும், ஆஞ்சநேயரின் அவதார நன்னாளான... அனுமன் ஜயந்தி நாளிலும் இங்கே ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள்.

மிகவும் வரப்பிரசாதியான இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரை வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

எப்படிச் செல்வது ? திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்தின் பெயர் பஞ்சவடி. திண்டிவணத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 29 வது கி.மீ தொலைவிலும் ,புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ தொலைவிலும் உள்ளது.

Read Entire Article