Last Updated:Oct 26, 2026 9:39 PM IST
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதை அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷிடம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக அன்பில் மகேஷ் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனை முடித்த பின் அன்பில் மகேஷை நீதிபதி முன் ஆஜர்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நியூஸ்18 தமிழ்நாடுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “அரசியலில் பக்குவப்பட்ட அரசாக இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள். முன் அனுபவம் எதுவும் இல்லாமல், பக்குவம் என்பது துளியும் இல்லாமல், நிர்வாகத்திறமை அற்ற அரசால் இப்படியான செயல்கள் தொடர்ந்துக்கொண்டிருக்கின்றன. இவற்றை பார்த்தெல்லாம் திமுக பதுங்குக்குழிக்குச் சென்றுவிடாது. யானையைபோல் திமுக மீண்டும் எழுந்து நிற்கும்.
தன் மேசையில் இருக்கும் மூன்று கோப்புகளில் இதுவும் ஒன்றா என்பதை சொன்னவரை பார்த்துதான் கேட்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை ஏற்கனவே சம்மன் பெற்று சுமார் 7 மணி நேரம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜராகி அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட பிறகும் அன்பில் மகேஷ் வேண்டும் என்றே அலக்கழிக்கப்படுகிறார். மேலும், மக்கள் பிரதிநிதியாகி எங்களைக்கூட சந்திக்கவிடாமல் மறுக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
.png)







English (US) ·