சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சியின் உயர்மட்டக் குழுவான மத்தியச் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்றது.
கட்சியின் ஆயிரக்கணக்கான அடித்தளப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட வாக்களிப்பில், 14 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியச் செயற்குழுவில் புதுமுகங்கள் இடம்பெறவில்லை. அனுபவம் வாய்ந்த பழைய தலைவர்களே மீண்டும் பெரும்பான்மை பெற்றுத் தலைமைப் பொறுப்பைத் தக்கவைத்துள்ளனர்.
மசெகவின் மாநாடு, விருது விழா மேடையில் வாக்களிப்பு முடிவுகளை அறிவித்த அக்கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ, அதிக வாக்குகள் பெற்ற முதல் 12 தலைவர்களின் பட்டியலை வெளியிட்டார்.
இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் முதன்முறையாக வாக்குகள் அடிப்படையில் முதல் 12 உறுப்பினர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்னர் 2024ல் அவர் மத்தியச் செயற்குழுவில் இணைக்கப்பட்டு, உதவிப் பொருளாளராகப் பணியாற்றி வந்தார் அவர்.
பிரதமர் லாரன்ஸ் வோங், கட்சியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று, தனது முதல் பொதுத் தேர்தலை கடந்த ஆண்டு நடத்திய பிறகு நடைபெறும் முதல் மத்தியச் செயற்குழு வாக்களிப்பு இது என்பது கவனிக்கத்தக்கது.
கட்சி வெளியிட்ட 19 பேர் கொண்ட பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில், 2025 பொதுத் தேர்தலில் முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வான திரு ஜெஃப்ரி சியாவ், திருவாட்டி ஜாஸ்மின் லாவ், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகிய மூவரும் இணைக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து அமைச்சரான திரு சியாவ், மனிதவளத் தற்காலிக அமைச்சரான திருவாட்டி லாவ் இருவரும் கடந்த ஜூலையில் அமைச்சரவை மாற்றத்தின்போது பதவி உயர்வு பெற்றவர்கள். இந்தப் 19 பேரில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு வாக்களிக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு வாக்குச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உட்கட்சி வாக்கெடுப்புக்கு பின் தேர்வானவர்களின் விவரங்களைக் கொண்ட மத்தியச் செயற்குழுவின் பட்டியலைக் கட்சித் தலைவர் டெஸ்மண்ட் லீ அறிவித்தார்.
12 பேர் கொண்ட புதிய மத்தியச் செயற்குழுவில் லாரன்ஸ் வோங், லீ சியன் லூங், டெஸ்மண்ட் லீ, சான் சுன் சிங், மசகோஸ் ஸுல்கிஃப்லி, கா.சண்முகம், கிரேஸ் ஃபூ, எட்வின் டோங், இந்திராணி ராஜா, ஓங் யி காங், விவியன் பாலகிருஷ்ணன், சீ ஹொங் டாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் வழமைப்படி, முதல் 12 இடங்களுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற இருவர் நேரடியாக இணைத்துக்கொள்ளப்பட்டதால், டாக்டர் டான் சீ லெங், திரு ஸாக்கி முகம்மது இருவருக்கும் திரு டெஸ்மண்ட் லீ வெளியிட்ட பட்டியலில் இடம் கிடைத்தது.
இந்நிலையில், 19 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றிருந்த திரு சியாவ், திருவாட்டி லாவ் இருவரும் செயற்குழுவுக்குத் தேர்வாகவில்லை. மேலும், திரு அலெக்ஸ் யாம், திருவாட்டி சிம் ஆன், திருவாட்டி ஜோசஃபின் டியோ ஆகியோரும் தேர்வாகவில்லை.
மசெகவின் கட்சி சாசனத்தின்படி, மத்தியச் செயற்குழுவில் 18 பேர் வரை இடம்பெறலாம்.
.png)







English (US) ·