பல்கலைக்கழக மாணவர்களின் மீள்திறனை வளர்க்க $1 மில்லியன் நிதி

3 hours ago 1

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகமும் (எஸ்யுஎஸ்எஸ்) ‘யுஓபி’ வங்கியும் இணைந்து $1 மில்லியன் மதிப்பிலான ‘யுஓபி எதிர்கால மீள்திறன் நிதி’யைத் தொடங்கியுள்ளன.

மாறிவரும் எதிர்கால வேலை உலகிற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் நடைமுறை அனுபவத்தைப் பெறவும் மாணவர்களுக்கு உதவுவதே அதன் முக்கிய நோக்கமாகும்.

‘யுஓபி’ அறநிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்த நன்கொடையை வழங்கும்.

அக்டோபர் 13 முதல் 15ஆம் தேதிவரை சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு மண்டபம், கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற எஸ்யுஎஸ்எஸ் பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு அந்த நிதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் முதல் வேந்தரான ஹலிமா யாக்கோப் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 3,600க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்.

கல்வி, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முனைவர் சையது ஹருன் அல்ஹப்ஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மாணவர்களின் மீள்திறனை மேம்படுத்த அந்த நிதி நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

முதலாவதாக, 41 முழுநேர, பகுதிநேரப் பட்டக்கல்வி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இரண்டாவதாக, தனிநபர் நல்வாழ்வு, சமூக ஈடுபாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘மீள்திறன் தொடர்’ பயிலரங்குகள் நடத்தப்படும்.

மூன்றாவதாக, பல்கலைக்கழகத்தின் புத்தாக்கத் திட்டத்தில் சிறந்து விளங்கும் இரண்டு தொடக்க நிறுவனங்களுக்குத் தலா $5,000 ஆரம்ப நிதியுதவி ஆண்டுதோறும் வழங்கப்படும்.

இறுதியாக, கல்விப் பயணத்தில் பெரும் சவால்களை எதிர்கொண்டு விடாமுயற்சியை வெளிப்படுத்திய மாணவருக்கு ஆண்டுதோறும் $1,000 மதிப்புள்ள சிறப்பு விருது வழங்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு நிறைந்த எதிர்காலப் பொருளியலில் மாணவர்கள் செழித்தோங்க அக்கூட்டு முயற்சி உதவும் என்று பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் டான் டாய் யோங் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்கள் யோசனைகளைச் செயலாக்கி சமூகத்திற்குப் பங்களிக்க அத்திட்டம் வழிவகுக்கும் என்று ‘யுஓபி’ அறநிறுவனத்தின் தலைவர் திருவாட்டி ஜேனட் யங் குறிப்பிட்டார்.

ஜெய் பிரகாஷ், அவரது மனைவி சசிரேகா.

ஜெய் பிரகாஷ், அவரது மனைவி சசிரேகா. - படம்: எஸ்யுஎஸ்எஸ்

இதனிடையே, மீள்திறனுக்கும் வாழ்நாள் கற்றலுக்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறையின் முதல் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஜெய் பிரகாஷ்.

பொதுச் சேவையில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், படிப்பின் பாதியில் நிரந்தர வேலையை விட்டுவிட்டு, சமூக மாற்றத்திற்கான ஆலோசனை, ஆய்வுப் பணியில் இறங்கினார்.

“என் மனைவியின் முழு ஆதரவோடும், ஆய்வுக் கண்காணிப்பாளர் முனைவர் செங் பூன் கெங்கின் வழிகாட்டலோடும் என் முனைவர் பட்ட ஆய்வை முன்னெடுத்தேன்,” என்று தமிழ் முரசிடம் அவர் தெரிவித்தார்.

கொள்கை உருவாக்கத்தையும் களப்பணியையும் இணைக்கும் ‘லீப்’ (LEAP) கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்த அவர், அடுத்த தலைமுறையினர் சமூகத்திற்குத் தீவிரமாகப் பங்களிக்கக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Read Entire Article