மதுரையில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பரவலாக மழை பெய்தது. மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல் உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும், திருப்பரங்குன்றம், திருநகர், விமான நிலையம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இரண்டு மணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. காவல் நிலைய வளாகம் மற்றும் சாலைகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
சிவகாசியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற வாகனம் தெரியாததால் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற 4 கார்கள், ஜீப், மற்றும் அரசு பேருந்து என 6 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர்.
தொடர் கனமழை காரணமாக ராஜபாளையம் அடுத்த ராக்காச்சியம்மன் கோயில் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து தொடங்கியுள்ளது.
கரூரில் அரை மணி நேரம் பெய்த மழைக்கே சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கியதால், மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.
திருவண்ணாமலை மாநகரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகக் காட்சி அளித்தன. குளம்போல் தேங்கிய நீரில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. கடைகள், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தேனி மாவட்டத்தில் பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, பெரியகுளம், தாமரைக்குளம், கைலாசபட்டி, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, மஞ்சளாறு அணை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம், புலியகுளம், உக்கடம் என மாநகர் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், குளிர்த்த சூழல் நிலவியது.
திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்தி மலையில் பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஈக்காடு, காக்களூர், புட்லூர், செவ்வாய்ப்பேட்டை, வேப்பம்பட்டு, திருப்பாச்சூர் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Today Rasi Palan | 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. அக்., 23, 2026!
இதேபோன்று விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
.png)







English (US) ·