Doctor Vikatan: சேலை கட்டினால் கேன்சர் வருமா? அதிர்ச்சி... ஆனால், உண்மை!

1 hour ago 1

சேலை மற்றும் வேட்டி உடுத்தும் பெண்களுக்கும் ஆண்களுக்கும், இடுப்புப் பகுதியில் ஏற்படும் தொடர்ச்சியான உராய்வும் அழுத்தமும் (Chronic Friction)தான் இதற்கு முக்கியக் காரணங்கள்.

Published:Just NowUpdated:Just Now

சேலை கட்டினால் கேன்சர் வருமா?

சேலை கட்டினால் கேன்சர் வருமா? ( AI image )

Doctor Vikatan: நீண்ட காலமாக சேலை கட்டுவோருக்கு, இடுப்புப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் புற்றுநோயாக மாறலாம் எனச் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அது எந்த அளவுக்கு உண்மை...  சேலை கட்டும் எல்லாப் பெண்களுக்கும் இந்த ரிஸ்க் இருக்கிறதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

நீங்கள் படித்த அந்தச் செய்தி உண்மைதான். ஆனால், சேலை கட்டும் எல்லாப் பெண்களுக்கும் அந்த ரிஸ்க் இருப்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சிலருக்கு அரிதாக இந்தப் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

தினமும் சேலை மற்றும் வேட்டி அணிபவர்களுக்கு இடுப்புப் பகுதியில் தோன்றும் இந்தப் பிரச்னை, மருத்துவ உலகில் ‘சேலை புற்றுநோய்’ (Saree Cancer) மற்றும் ‘வேட்டி புற்றுநோய்’ (Dhoti Cancer) என்று அழைக்கப்படுகிறது.

இது ஒருவகை சருமப் புற்றுநோய் (Squamous Cell Carcinoma). பொதுவாகவே உடலில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பல ஆண்டுகள் தொடர்ந்து உராய்வோ அல்லது எரிச்சலோ (Irritation) இருந்தால், அங்கு புற்றுநோய் தோன்றக்கூடும். (உதாரணத்துக்கு, கூர்மையான பற்கள் வாயின் உட்பகுதியில் தொடர்ந்து உராய்வதால் வாய்ப் புற்றுநோய் ஏற்படுவது போல).

சேலை மற்றும் வேட்டி உடுத்தும் பெண்களுக்கும் ஆண்களுக்கும், இடுப்புப் பகுதியில் ஏற்படும் தொடர்ச்சியான உராய்வும் அழுத்தமும் (Chronic Friction)தான் இதற்கு முக்கியக் காரணங்கள்.

பெண்களில், பாவாடை நாடாவை இடுப்பில் பல வருடங்களாக ஒரே இடத்தில் மிகவும் இறுக்கமாகக் கட்டுவதாலும், ஆண்களில், வேட்டியைத் தொடர்ந்து இடுப்பில் ஒரே இடத்தில் இறுக்கமாகக் கட்டுவதாலும் இந்தப் பிரச்னை வருகிறது.

தவிர, நம் ஊரின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த காலநிலையில், இறுக்கமாகக் கட்டப்படும் சருமப் பகுதியில் வியர்வையும்  அழுக்கும் சேரும். இதனால் அப்பகுதியில் தொடர் அரிப்பும், நாள்பட்ட சரும அழற்சியும் (Chronic Inflammation) ஏற்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு அது புற்றுநோயாக மாற வாய்ப்பாகிறது.

Cancer awareness

Cancer awareness

இடுப்புப் பகுதியில் சேலை அல்லது வேட்டி கட்டும் இடத்தில் சருமம் அளவுக்கு அதிகமாகக் கருத்தல் அல்லது தடித்தல், நீண்ட நாள்களாக ஆறாமல் இருக்கும் புண், தொடர் அரிப்பு அல்லது சருமத்தில் ஏற்படும் செதில் போன்ற மாற்றங்கள் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.

பாவாடை நாடா அல்லது வேட்டியை அதிக இறுக்கம் இல்லாமல் வசதியாகக் கட்டுவதுதான் எப்போதும் நல்லது. சேலை மற்றும் வேட்டியை எப்போதும் இடுப்பின் ஒரே இடத்தில் கட்டாமல், தினமும் சற்றே மேல் அல்லது கீழ் என மாற்றிக் கட்டலாம். மெல்லிய நாடாவுக்குப் பதிலாக அகலமான நாடாக்கள் பயன்படுத்துவது ஒரே இடத்தில் அழுத்தத்தைக் குவிக்காமல் இருக்க உதவும்.

பருத்தியால் ஆன காற்றோட்டமான ஆடைகளை அணிவதும், இடுப்புப் பகுதியை எப்போதும் சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்வதும் எரிச்சலைக் குறைக்கும். இந்த வகைப் புற்றுநோய் மிகவும் அரிதாகவே  ஏற்படும். எனவே, பயப்படத் தேவையில்லை. இடுப்புப் பகுதியில் ஆறாத புண் அல்லது சரும மாற்றங்கள் இருந்தால் மட்டும் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வதும், ஆடை அணியும் பழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்வதும் போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Read Entire Article