நோயாளிகள் வேலைதேட உதவிய ஊழியருக்குச் சுகாதார மனிதநேய விருது

54 minutes ago 1

நோயால் வெகுநாள் அவதிப்பட்ட 130க்கும் அதிகமான நோயாளிகள் வேலைவாய்ப்புப் பெற ‘என்எச்ஜி ஹெல்த்’ மீட்சி ஆதரவுக் குழு உதவியுள்ளது.

அக்குழுவின் கூட்டு முயற்சி, நோயாளி பராமரிப்புக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி, 2026ஆம் ஆண்டுக்கான சுகாதார மனிதநேய விருது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) வழங்கப்பட்டது.

எம்ஓஎச் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்தது. அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம் மொத்தம் 20 குழுக்களுக்கு விருதுகளை வழங்கினார்.

80 தனிநபர்களின் இரக்கம், அர்ப்பணிப்பைப் பாராட்டி, அதனைச் சிறப்பிக்கும் வகையில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் விருதுகளை அளித்தார்.

மக்களுக்குச் சேவை செய்வது என்பது வெறும் சிகிச்சையோடு நின்றுவிடாமல், அவர்கள் நம்பிக்கையோடு வாழ்வதற்கு உதவுவதையும் உள்ளடக்கியது. இதற்கு நடைமுறையில் சான்றாக விளங்குகின்றனர் நமது விருதாளர்கள்,” என அதிபர் தர்மன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நோயாளிகள் மீண்டும் வேலைவாய்ப்புப் பெற உதவுவது வெறும் சமூகப் பொறுப்பு மட்டுமன்று, அது ஒரு மருத்துவக் கடமை என ‘என்எச்ஜி ஹெல்த்’ தெரிவித்துள்ளது.

நோயாளிகள் தங்களின் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க இது உதவுகிறது.

நோயாளிகள் தங்களின் வாழ்க்கைத் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான ஆதரவு, நம்பிக்கை ஆகியவை கிடைக்கும் வரை அவர்களின் குணமடையும் பாதை முழுமையடையாது என டான் டோக் செங் மருத்துவமனையின் முதுநிலைப் பயிற்சிபெற்ற செயல்முறைச் சிகிச்சை நிபுணரும் ‘என்எச்ஜி ஹெல்த்’ மீட்சி ஆதரவுக் குழுவின் உறுப்பினருமான ஹெய்டி டான் கூறினார்.

டான் டோக் செங் மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, ஈசூன் சமூக மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த 10 மருத்துவத் தொண்டூழியர்களும் செயல்முறைச் சிகிச்சை நிபுணர்களும் அந்த ஆதரவுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

வலிப்பு நோய், தீராத சிறுநீரக நோய், நாட்பட்ட வலி, மனச்சோர்வு போன்ற நோய்களால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அக்குழு உதவி வழங்கியுள்ளது.

Read Entire Article