மூத்த பத்திரிகையாளர்
ஆர். விஜயசங்கர்,
மேனாள் ஆசிரியர், ஃப்ரண்ட்லைன் (Frontline)
கரப்பான் பூச்சிகள் என்றாலே முதலில் தோன்றுவது அருவெறுப்புதான். ஆனால் அவற்றின் பெயரால் தன்னிச்சையாக உருவான ஓர் இணையவெளி இயக்கம் தோற்கடிக்கப்பட முடியாதவர் என்கிற பிம்பத்தை வைத்துக்கொண்டு கடந்த 12 ஆண்டுகளாக நாட்டை ஆண்டுவரும் நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் அரசுக்கு ஓர் அச்சத்தைக் கொடுத்துப் பணிய வைத்திருப்பது உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கடந்த நீட் (Neet) தேர்வில் வினாத்தாள்கள் கசியவிடப்பட்டதால் 23 லட்சம் மாணவர்கள் மறு தேர்வு எழுத நேர்ந்ததற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற பிரதான கோரிக்கையை முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி டில்லியில் நடத்திய போராட்டமும், அதன் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளிலும் நடந்த மாணவர் எழுச்சிகளும், போராட்டங்களின் முடிவில் பிரதான் பதவி விலகியதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாகக் கொண்டாடப்படுகின்றன.
அதே நேரத்தில் காக்ரோச் கட்சியின் கோரிக்கையான ‘நியாயமான நீட்’ என்பது இளைஞர்களின் எதிர்காலத் தைக் கேள்விக்குறியாக்கி அவர்களில் சிலரை தற்கொலை துயரத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் கொடுமைக்கு ஒரு சரியான தீர்வாக இருக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
காக்ரோச் கட்சியே லட்சக்கணக்கான மாணவர்க ளையும், அவர்களின் பெற்றோர்களையும் அழுத்திக் கொண்டிருக்கும் கோபத்தையும், விரக்தியையும், இயலாமையையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு பாதுகாப்பு வால்வ்தான், இந்தப் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கோபமெல்லாம் நீராவி போல் வெளியேறிய பின்னும் நீட் என்கிற மோசடி தொடரும் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
காக்ரோச் ஜனதா கட்சிக்கு
ரகசிய அஜெண்டா?
கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஒரு ரகசிய அஜெண்டா இருக்கிறதா என்கிற சந்தேகத்திற்கு காலம்தான் பதில் சொல்லும். ஆனால் நியாயமான நீட் என்கிற அதன் கோரிக்கை சரியானதல்ல, அந்தத் தேர்வை நியாயமாக நடத்த முடியாது என்பதற்கான ஏராளமான தரவுகள் இருக்கின்றன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசு நியமித்த நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை இந்த உண்மையை சந்தேகத்திற்கிடமின்றி நிறுவியிருக்கிறது.

ஆயினும் இந்த மாணவர் எழுச்சி திடீரென்று ஏற்பட்டதா? கரப்பான் பூச்சி என்கிற ஒரு குறியீடு இவ்வளவு பெரிய கோபத்தைக் கிளறிய தீப்பொறியாக மாறியது எப்படி? நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளின் திரட்சி ஒரு கட்டத்தில் பெருவெடிப்பாக மாறுகிறது என்பதுதான் உலக அனுபவம்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஜென் இசட் என்று அழைக்கப்படும் 15 வயதிலிருந்து 26 வயது வரையில் இருக்கும் தலைமுறையைப் பொறுத்தவரையில் பெரும் பிரச்சினைகளாக இருப்பவை கல்வியும் வேலைவாய்ப்பும்தான். ஆனால் இன்றைய சூழலில் அவை இரண்டுமே அவர்களுக்கு எளிதாக, தரமாகக் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. முதலில் கல்வி எப்படி இருக்கிறதென்று பார்ப்போம்.
கட்டாயக் கல்வி– அடிப்படை உரிமை
ஒரு வயதிலிருந்து 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 45- ஆவது பிரிவு தெளிவாக வரையறுத்திருக்கிறது. அதாவது, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குள் 14 வயது வரையான குழந்தைகள் அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வியை அரசு வழங்கவேண்டுமென்று கூறுகிறது.

ஆயினும் அது அரசுக் கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக இருந்ததால் (Directive Principles of State Policy) அதனை நீதிமன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்த முடியாது. இந்தக் குறையை அரசியலமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தம் (2002) நீக்கியது.
அரசியலமைப்புச் சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய பிரிவு 21(A) சேர்க்கப்பட்டது.
பிரிவு 51A(k) 6 முதல் 14 வயது உட்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் அடிப்படைக் கடமையாக வரையறுத்தது.
இலவச, கட்டாயக் கல்வி என்கிற அடிப்படை உரிமையை உறுதி செய்ய வேண்டிய அரசு தன் நிதியாதாரங்களை குழந்தைகள் எளிதில் எட்ட முடிகிற சுற்று வட்டாரத்தில் பள்ளிக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும், ஆசிரியர்களை நியமிப்பது போன்ற செலவுகளுக்கு எந்த அளவு ஒதுக்குகிறது என்பது ஒரு முக்கியமான கேள்வி.
கோத்தாரி ஆணையம்
கல்விக் கொள்கை குறித்து ஆராய்வதற்காக ஒன்றிய அரசு, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவரான டி.எஸ். கோத்தாரியை ஜூலை 14, 1964 அன்று நியமித்தது. கோத்தாரி ஆணையம் ஒரு விரிவான அறிக்கையை ஜூன் 29, 1966 அன்று அளித்தது. அதன் பரிந்துரைகளில் முக்கியமானது பொதுப் பள்ளி அமைப்பை உருவாக்குவதுதான்.

“தேசத்தின் வளர்ச்சிக்கான வலுவான கருவியாக கல்வி அமைப்பு உருவாக வேண்டுமெனில், குறிப்பாக சமூக மற்றும் தேசிய ஒருமைப்பாடு உருவாக வேண்டுமெனில், நாம் பொதுக் கல்விக்கான ஓர் அமைப்பை உருவாக்கும் லட்சியத்தை நோக்கி நகரவேண்டும் – அந்த அமைப்பு ஜாதி, மதம், சமூகம் மற்றும் பொருளாதார அடையாளங்களையோ அல்லது அந்தஸ்தையோ பொருட்படுத்தாமல் அனைத்துக் குழந்தைகளையும் அனுமதிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்,” என்று கோத்தாரி ஆணையத்தின் அறிக்கை கூறியது.
கல்வி வாய்ப்புகளில் சமத்துவம் வேண்டும் என்பதை கோத்தாரி ஆணையம் இவ்வாறு வலியுறுத்தியது: “பிற்படுத்தப்பட்ட அல்லது வசதி வாய்ப்புகள் இல்லாத வர்க்கங்கள் மற்றும் தனிமனிதர்கள் கல்வியை தாம் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான நெம்புகோலாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கல்வி வாய்ப்புகளைச் சமமாக்குவதுதான் கல்வியின் முக்கியமான சமூக நோக்கங்களில் ஒன்று. பிற்படுத்தப்பட்டோருக்கு, குறிப்பாக பழங்குடியினருக்கு, கல்வியளிப்பது சமத்துவத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்குமான பெரிய திட்டமாகும். இந்த நோக்கத்திற்காகச் செய்யப்படும் எந்த செலவும் அதிகமானது என்று கருதத் தேவையில்லை.”
பொதுப் பள்ளிகள் அல்லது சுற்று வட்டாரப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்; அவை ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்காகத் திறந்திருக்க வேண்டும் என்பது ஆணையத்தின் முக்கியப் பரிந்துரையாகும்.
ஆனால் அரசியலமைப்புச் சட்டமும் கல்வி உரிமைச் சட்டமும் அமுலுக்கு வந்த பல தசாப்தங்களுக்குப் பிறகும் கூட நிலைமை என்ன? பொதுப் பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
ஒன்றிய பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் Unified District Information System for Education Plus (UDISE+) என்
கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவுகளின் படி (2024ஆம் ஆண்டுக்கானது)
* இந்தியாவில் இருக்கும் 24 கோடி பள்ளி செல்லும் குழந்தைகளில் 40% தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
* 2010ஆம் ஆண்டில் 15% பேர்தான் தனியார் பள்ளிகளில் படித்தனர்.

* 2014 முதல் 2024 வரை தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 15% கூடியது.
* மொத்தமிருக்கும் 14.5 லட்சம் பள்ளிகளில் 3.5 லட்சம் தனியார் பள்ளிகள். இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் (Tier-2 and Tier-3 cities) ஒப்பீட்டு அளவில் குறைந்த கட்டணம் வாங்கும் பள்ளிகளை நோக்கி நடுத்தர வர்க்க குடும்பங்களும் நகர்வதாக கல்வியாளர்கள் கூறுவதாக ‘தி இந்து’ நாளேட்டில் வெளியான செய்தி ஒன்று கூறுகிறது. அவை அரசுப் பள்ளிகளை விட “தரம் உயர்ந்தவை”, சிறந்த ஆங்கில வழி;f கல்வி தருபவை என்கிற பார்வை இதற்குக் காரணமாக இருக்கிறது.
ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்கத் துறை சென்ற ஆண்டு Comprehensive Modular Survey on Education என்கிற கணக்கெடுப்பை நடத்தியது.
அதன் முடிவுகள்:
கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 66% பேரும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 24.3% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8.9% பேரும், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் 0.6% பேரும் படிக்கின்றனர்.
நகர்ப்புறம் என்று வரும்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் 24.3% பேரும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் 51.4% பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 17.6% பேரும், அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் 0.8% பேரும் படிக்கின்றனர்.
கல்விக் கட்டணம், போக்குவரத்து, சீருடைகள், பாடப்புத்தகங்கள், எழுதுபொருட்கள், மற்றும் இதர செலவுகளைக் கணக்கிட்டால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆகும் சராசரி செலவு ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவு (கிராமப்புறங்களில் ரூ. 2801; நகர்ப்புறங்களில் ரூ. 4374 ).
அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் உள்ள ஒரு மாணவனுக்கு ஆகும் சராசரி செலவு ரூ. 22,919 (கிராமங்களில்) ரூ. 35,798 (நகரங்களில்). அதாவது அரசுப் பள்ளிகளில் ஆகும் செலவை விட சுமார் 8 மடங்கு அதிகம்.

நன்கொடை என்கிற பெயரில் மழலைப் பள்ளிகள் முதல் அனைத்து நிலைகளில் நடக்கும் கொள்ளை இந்தக் கணக்கிற்கு வெளியேதான். தனியார் நடத்தும் மழலையர் பள்ளிகளில் நகர்ப்புறங்களில் சராசரி ஆண்டுக் கட்டணம் ரூ. 26,188. இது அரசு நடத்தும் பள்ளிகளை விட 16 மடங்கு அதிகம்.
எந்த வகைப் பள்ளியாக இருந்தாலும் 97% செலவு என்கிற சுமை குடும்பங்களின் மீதுதான் விழுகிறது. இந்தியாவில் கல்விக் கடன், உதவித் தொகை போன்றவை மிகக் குறைவு.
ரூ.14 லட்சம் கோடி செலவு
தேசிய அளவில் தனியார் பள்ளிக் கட்டணத்துக்கு ஆகும் வருடாந்திர செலவு ரூ. 5 லட்சம் முதல் 6 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர டியூஷன், கோச்சிங் போன்றவற்றிற் காக ஆகும் செலவு சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி.
புத்தகம், சீருடை, போக்குவரத்துக்கான செலவு தோராயமாக ரூ. 1.5 லட்சம் கோடி.
இதர செலவுகளையும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு பெற்றோர்கள் செலவு ரூ. 14 லட்சம் கோடி ஆகிறது என்று கூறப்படுகிறது.
கோத்தாரி ஆணையம் தான் பரிந்துரைத்த நோக்கங்களை நிறைவேற்ற நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் (Gross Domestic Product) 6 சதவீதத்தை அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவிட வேண்டும் என்று கூறி 60 ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த இலக்கு வெகு தூரத்திலேயே இருக்கிறது. கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட அது 2% என்ற அளவிலேயே இருக்கிறது.

கல்விக்கான அரசின் செலவு அதிகரிக்காத வரையில் பொதுப் பள்ளிகளின் தரம், உள்கட்டுமானம் போன்றவை குறைந்து குடும்பங்களின் கல்விச் செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை. கல்வியில் அரசின் முதலீடு குறையும்போது உள் கட்டுமானம் மற்றும் பிற கல்வி வசதிகள்- ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்றவை பாதிக்கப்பட்டு, இந்த இடைவெளியை நிரப்ப குடும்பங்கள் அதிகம் செலவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அரசின் கல்விச் செலவுக்கும், குடும்பங்களின் கல்விச் செலவுக்கும் இடையில் இருக்கும் உறவை பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை
கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் கூறுகிறது. அதாவது ஒரு நாளுக்கு 25 பள்ளிகள் என்கிற விகிதத்தில் மூடப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2.26 கோடி குறைந்திருக்கிறது. மொத்த மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை 2005-ஆம் ஆண்டில் 71% ஆக இருந்தது. 2024-2025இல் அது 49.24% ஆக வீழ்ந்திருக்கிறது.
”94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் அதே நேரத்தில் 43,000 தனியார் பள்ளிகள் திறக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆர்.எஸ்.எஸ். சார்ந்த அமைப்புகளால் நடத்தப் படுகின்றன” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ‘தி இந்து’ பத்திரிக்கையில் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அச்சுறுத்தும் நீட்
இத்தகைய தடைகளையெல்லாம் கடந்துதான் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் வருகிறார்கள். அதில் இன்று பூதாகரப் பிரச்சினையாக வெடித்திருக்கிறது நீட். கல்விச் செலவு என்கிற பெரும் பொருளாதாரத் தடையை மீறி நீட் நுழைவுத் தேர்வுக்குள் வருபவர்களுக்கு கோச்சிங் அல்லது பயிற்சி என்கிற அடுத்த பெரும் செலவு பிரமாண்டமாக முன்னே நிற்கிறது.
நீட் தேர்வுக்காக செலவிடப்படும் தொகை குறித்து அதிகாரபூர்வ மதிப்பீடு எதுவும் இல்லையென்றபோதிலும் நீட் பயிற்சி மய்யங்கள் குறித்த செய்திகள், இப்போது பொது வெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஒரு தோரயமான மதிப்பீட்டைச் செய்ய முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை 22 அல்லது 23 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களில் 70-80 சதவீதம் பேர் இணையவழியிலும், நேரடி வகுப்புகளிலும், பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களிலும் பயிற்சி பெறுகிறார்கள்.
* இணையவழி பயிற்சிக்கு ஒரு மாணவனுக்கு ரூ. 80,000 வரை செலவாகிறது.
* பயிற்சி வகுப்புகளுக்கு ஆகும் செலவு ரூ. 1 லட்சம்.
* பள்ளிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு இதை விடப் பலமடங்கு அதிகம் செலவு.
* பயிற்சிக்காக மட்டுமே ஓர் ஆண்டில் சுமார் 25,000 கோடி மொத்தம் செலவாகிறது.
இது போக தங்குமிடம், பயணம், புத்தகங்கள், பயிற்சி வினாத்தாள்கள் போன்றவற்றின் செலவு களையும் இதில் சேர்க்க வேண்டியுள்ளது. சராசரியாக ஒரு மாணவன் இவற்றுக்காக ரூ. 1 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
* நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 50,000 கோடி குடும்பங்களால் செலவிடப் படுகிறது.
* 2025-2026இன் ஒன்றிய பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையான ரூ. 78,572 கோடியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நீட் பகாசுரனின் அளவு புரியும்.
– தொடரும்
நன்றி: மின்னம்பலம் இணையதளம்
.png)
1 month ago
7



English (US) ·