Last Updated:Aug 02, 2026 10:08 PM IST
நடிகை அதிதி சர்மா, கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக், மாமியார், நாத்தனார் மீது குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர், சில மாதங்களிலேயே கொடுமைப்படுத்தத் தொடங்கியதாக பிரபல சின்னத்திரை நடிகை அதிதி சர்மா காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
மும்பை கோரேகான் பகுதியில் பிரபல சின்னத்திரை நடிகை அதிதி சர்மா வசித்து வருகிறார். 'கலீரேன்', 'யே ஜாது ஹை ஜின் கா', 'ரப் சே ஹை துவா' உள்ளிட்ட ஹிந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை அதிதி சர்மா.
இந்நிலையில், இவர் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான குடும்ப வன்முறை மற்றும் மன உளைச்சல் புகார்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்துள்ளார். இது தொடர்பாக மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் ஜூலை 31 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தனது கணவர் அபினீத் வித்யானந்த் கௌஷிக், மாமியார் ஊர்மிளா கௌஷிக் மற்றும் நாத்தனார் கீர்த்தி கௌஷிக் ஆகியோர் மீது குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆன்லைன் நடிப்புப் பயிற்சியின்போது அபினீத்துடன் அதிதிக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதன்பின் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் 2024ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவரின் நடத்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பொதுமக்களிடம் சிக்கிய திருடன்.. போலீசார் சொன்ன பகீர் காரணம்.. என்ன நடந்தது?
தனது ஆடை அணியும் விதம் முதல் அன்றாட வாழ்க்கை வரை பல்வேறு விஷயங்களில் தலையிட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வீட்டுச் செலவுக்குக் கூட பணம் வழங்காமல், தன்னிடமிருந்தே பணம் வாங்கியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2025 புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு, தனது நடத்தை மீது கணவர் அடிக்கடி சந்தேகம் கொண்டதாகவும், செல்போனை சோதனை செய்ததுடன், வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி மனரீதியாக துன்புறுத்தியதாகவும் அதிதி தெரிவித்துள்ளார்.
மேலும், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேசவிடாமல் தனிமைப்படுத்தி வைத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார். திருமணத்தின்போது வழங்கப்பட்ட வைர மோதிரம், தங்க நகைகள், மாங்கல்யம் உள்ளிட்ட நகைகளை மாமியார் எடுத்துக்கொண்டு திருப்பித் தர மறுத்ததாகவும், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றபோதெல்லாம் மாமியாரும், நாத்தனாரும் கணவருக்கே ஆதரவாக செயல்பட்டதாகவும் அதிதி குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மூவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அபினீத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித விளக்கமும் வெளியாகவில்லை.
Location :
Mumbai,Maharashtra
First Published :
Aug 02, 2026 10:08 PM IST
.png)



English (US) ·