தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தர ரூபாய் 150 கோடி பேரம் உத்தவ் சிவ சேனா குற்றச்சாட்டு!

10 minutes ago 1

மும்பை, நவ.23 தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.150 கோடி வழங்க பாஜக பேரம் பேசி வருவதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 850 வரை உயர்த்தும் தொகுதி மறுவரையறை முயற்சியுடன், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இது மிகப் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுதொடர்பாக சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக பணம் கொடுத்து பேரம் பேசுகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்க்கு ரூ.100 கோடி எனப் பேசப்பட்டது. தற்போது அந்தத் தொகை ரூ.150 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பேரத்தை நடத்துவதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலைவர்கள் சிலருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒன்றிய அரசு கூட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மும்பைக்கு வருகிறார். அவர் ஏன் இவ்வளவு முறை மும்பைக்கு வருகிறார்? இங்கு என்ன பேரம் நடைபெறுகிறது? நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பணம் மும்பை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது” என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சஞ்சய் ராவத்.

Read Entire Article