புதுடெல்லி: ராம்லீலா விளையாட்டரங்கில் நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘இண்டியா’ கூட்டணியின் ஆர்ப்பாட்டப் பேரணியைத் தள்ளிவைக்குமாறு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத் தொழில், வர்த்தகக் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
பண்டிகைக் காலத்தில் அப்பேரணி நடந்தால் ரூ. 10,000 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும் என அக்கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தீபாவளி நாள்களில் புதுடெல்லியில் ரூ. 25,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும். அக்டோபர் மாதப் போராட்டங்களால் ஏற்கெனவே வர்த்தகர்களுக்கு ரூ. 3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
சாந்தினி சவுக், சதார் பஜார் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தைகளும் பழைய, புதிய புதுடெல்லி ரயில் நிலையங்களும் விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ளன.
சாலைகள் முடக்கப்பட்டால் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வணிகம் பாதிக்கப்படும் என வர்த்தகர்கள் கவலை கொண்டுள்ளனர்.
போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும் வாழ்வாதாரம் வர்த்தகர்களின் உரிமை என வர்த்தகச் சங்கத் தலைவர் அதுல் பார்கவா கூறினார்.
வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க நேரிடும் என உச்ச நீதிமன்றமும் முன்னதாக எச்சரித்திருந்தது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக ‘டெல்லி சலோ’ பேரணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட மாட்டோம் என அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா போரா தெரிவித்தார். இந்தியாவில் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமைதி காக்கும்படி காவல்துறை அனுப்பிய அறிக்கைக்கு எதிரான அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் தொடரும் என சிஜேபி அமைப்பும் அறிவித்துள்ளது. தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஹைதராபாத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்குச் சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.
.png)







English (US) ·