சேலம்: தவெக அரசை அதிகாரிகள் சிலர் தவறாக வழிநடத்துவதாக சௌமியா அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.
சேலம் மாவட்டம், வெள்ளக்கல்பட்டியில் ஐந்து மாவட்டங்களின் குப்பைகளைச் சேகரித்து எரியூட்டி மின்சாரம் தயாரிக்கும் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பசுமைத் தாயகம் இயக்கத் தலைவரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணியிடம், அத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சேலம் நீர் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினரும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி சௌமியா, அரசு அதிகாரிகளைக் குறைகூறினார்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குப்பை எரியூட்டும் திட்டத்தையே, தற்போதைய அதிகாரிகள் பெயர் மாற்றம் செய்து மீண்டும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்றும் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 28 விழுக்காடு ‘டயாக்சின்’ நச்சுக்காற்று வெளியேறி சேலத்தில் உள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய் பாதிப்புகளுக்கு ஆளாவார்கள் என்றும் சௌமியா அன்புமணி எச்சரித்தார்.
“10 மெகாவாட் மின்சார உற்பத்திக்காகப் பெருந்திரளான மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பலிகொடுக்க அரசு முற்படக் கூடாது.
“ரூ.3,000 கோடி மதிப்பிலான கனிமவளம் நிறைந்த பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சிக்கு பாமகவும் பசுமைத் தாயகமும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும்,” என்றார் அவர்.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இத்திட்டத்தின் தீவிரத்தை முதல்வரின் கவனத்திற்கு நேரில் கொண்டு சென்று முறையிடப்போவதாகத் தெரிவித்த சௌமியா அன்புமணி, அரசு இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
.png)







English (US) ·