Last Updated:Nov 23, 2026 5:03 PM IST
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை திருநாளில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் அமைதிப் பேரணி நடைபெற இருந்தது. ஆனால், இதற்கான அனுமதியை காவல்துறை ரத்து செய்து, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “மத நல்லிணக்க பேரணியில் நான் பங்கேற்க இருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை இப்போது ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
பேரணிக்கு காவல்துறை அனுமதி அளித்திருக்கலாம். உள்ளூர் சூழலை கருத்தில் கொண்டு காவல்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு மாறாக நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.
பாரம்பரியமாக எங்கு தீபம் ஏற்றப்பட்டதோ அங்கு தான் தீபம் ஏற்றப்பட உள்ளது. அது தான் அரசின் நிலைப்பாடு. இந்து மக்களுக்கு எதிராக தமிழக அரசு இல்லை. சங் பரிவார் அமைப்புகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். சீராய்வு மனு மூலமாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை சொல்லியுள்ளது.
எனவே, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் தான் தீபம் ஏற்றப்படும் என நம்புகிறேன். கள்ளக்குறிச்சி ஆட்சியர் துணிந்து வெளிப்படையாக பேசினால் தான் தீர்வு கிடைக்கும். கட்சி தான் மாறியுள்ளது. இது தமிழக அரசின் ஆட்சி தான்.
எனவே இரு அரசுக்கும் ஒரே முடிவு தான். உச்சநீதிமன்றத்தை விடவும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. வரலாற்று உண்மைக்கு மாறாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. உச்சநீதிமன்றத்தை விடவும் தமிழ்நாட்டின் வரலாற்று பின்னணியை தமிழக அரசு அறிந்து வைத்துள்ளது. எனவே, அரசு தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
.png)







English (US) ·