Last Updated:Oct 23, 2026 7:44 PM IST
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் வீரமணி உள்பட மூன்று பேரை, இரண்டு நாட்கள் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதியளித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்முறை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் கிரானைட் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்மன், வீரமணி உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரமணிக்கு எதிராக இதுவரை ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல் வழக்கில் வீரமணி உள்ளிட்டோரை ஏற்கனவே சிறப்பு புலனாய்வு குழுவினர், காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், வீரமணி உள்பட நான்கு பேரை மூன்று நாட்களுக்கு மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் நீதிபதி பத்மா விசாரித்தார். வீரமணி தரப்பில், வீரமணிக்கு 84 வயது ஆகிறது. வயது முதிர்வு காரணமாக ஏற்கனவே சிறைக்குள் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை வெளியே அழைத்துச் செல்வது அவசியமோ அல்லது பொருத்தமானதோ அல்ல.
வெளியே அழைத்துச் சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. விசாரணை என்ற பெயரில் அவரை காவல் துறையினர் துன்புறுத்துகின்றனர் என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழு தரப்பில், பணப்பரிமாற்றம் குறித்து மீண்டும் நான்கு பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.பத்மா, வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
.png)







English (US) ·