ஜகார்த்தா: சிங்கப்பூருக்குக் குழாய்வழி அனுப்பப்படும் இயற்கை எரிவாயு விநியோகத்தை நாள் ஒன்றுக்கு 31 பில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுகள் (பிபிடியுடி) வரை இந்தோனீசியா குறைத்துள்ளது.
அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தலைமையிலான அரசு, தனது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உள்நாட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தோனீசியாவின் எண்ணெய், எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஜோக்கோ சிஸ்வாந்தோ சனிக்கிழமை (அக்டோபர் 24) முதல் இந்நடவடிக்கை நடப்புக்கு வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட விநியோகக் குழாய்கள் சிங்கப்பூருடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், இந்தக் குறைப்பு சிங்கப்பூரை மட்டுமே பாதிக்கும் என்றார் அவர்.
கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்க எரிசக்தித் தகவல் நிர்வாகத்தின் புள்ளிவிவரங்களின்படி இந்தக் குறைப்பானது, 2024ல் இந்தோனீசியா குழாய் வழியாகச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்த எரிவாயுவில் ஏறக்குறைய 8 விழுக்காடு.
அந்த ஆண்டில் இந்தோனீசியா கிட்டத்தட்ட 4.11 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டது. எனினும், தற்போதைய ஒட்டுமொத்த விநியோகத்தில் இந்தக் குறைப்பு எத்தனை விழுக்காடு என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
உள்நாட்டு எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்ய சிங்கப்பூருக்கான ஏற்றுமதியைக் குறைக்க இந்தோனீசியா பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருகிறது. 2022ல் சிங்கப்பூருடனான எரிவாயு விநியோக ஒப்பந்தம் 2028 வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், விநியோக அளவு குறைக்கப்பட்டது.
தற்போது உற்பத்தியாகும் எரிவாயுவில் 70 விழுக்காடு உள்நாட்டிற்கும், 30 விழுக்காடு ஏற்றுமதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்துறை வளர்ச்சிக்குக் கூடுதல் எரிவாயு தேவைப்படுவதால் இந்த ஒதுக்கீடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
அண்டை நாடுகளுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்வதை முழுமையாக நிறுத்துவது குறித்தும் அரசு ஆலோசித்து வருவதாக இந்தோனீசிய எரிசக்தி, கனிம வள அமைச்சர் பஹ்லில் லஹடாலியா அண்மையில் தெரிவித்திருந்தார்.
நாட்டின் இயற்கை வளங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என அதிபர் பிரபோவோ அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார்.
சிங்கப்பூரின் முக்கிய எரிவாயு விநியோக நாடுகளில் இந்தோனீசியாவும் ஒன்று. நடப்பு இறக்குமதி ஒப்பந்தங்கள் 2028ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடைய உள்ளதாகத் துணைப் பிரதமர் கான் கிம் யோங் முன்னதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
.png)







English (US) ·