திருவனந்தபுரம், அக். 24-
கேரள கவர்னர் மாளிகையான லோக் பவனில் அசைவ உணவுகளை சமைக்கவும், பரிமாறவும் தடை விதித்து புதிய கவர்னர் ஓம் பிரகாஷ் மாத்துர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.கேரள மாநில கவர்னராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், தமிழ்நாடு பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் கேரள கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தமிழ்நாடு கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, சிக்கிம் கவர்னராக இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்துர், கேரளத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்தார். அதன்படி, திருவனந்தபுரம் லோக் பவனில் நேற்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. கேரள தலைமை நீதிபதி சவுமென் சென், ஓம் பிரகாஷ் மாத்துருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் முதல்-மந்திரி வி.டி.சதீசன், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், மந்திரிகள், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பதவியேற்ற பின்னர் அலுவல் பணிகளைத் தொடர்ந்த ஓம் பிரகாஷ் மாத்துர், லோக் பவனில் அசைவ உணவுகளுக்கு தடை விதித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கேரளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவர்னர் மாளிகையில் அசைவ உணவு தடை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எம்.பி., தனது பேஸ்புக் பதிவில், கேரளம் கலப்பு உணவு பண்பாடு கொண்ட மாநிலம் என்றும், கடலோர மாநிலமான அங்கு மீன்வளம் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் சமமாக வாழும் நிலையில், உணவுப் பழக்கங்களைத் தடை செய்யவோ, மக்கள் என்ன உணவு உண்ண வேண்டும் என அறிவுறுத்தவோ முயல்வதை ஏற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.