கிளமெண்டி தீ விபத்து: உலர் செங்குத்துக் குழாய் சரியான இயங்குநிலையில் இல்லை

1 month ago 9

251e9175-3a28-466f-a72d-eac8ff5379dc

ஜூலை 31 இரவு 11.10 மணியளவில் கிளமெண்டி அவென்யூ 4, புளோக் 309ன் எட்டாவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியது. - படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

கிளமெண்டியிலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பு ஒன்றில் ஜூலை 31ஆம் தேதி பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, உலர் செங்குத்துக் குழாய் (dry rising main) சரியான இயங்குநிலையில் இல்லை.

அதனால், தீயணைப்புப் பணி பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், தீயணைப்பு வண்டியிலிருந்து மேல்தளங்களுக்கு நீரை ஏற்றி அனுப்ப ஏதுவாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சிவப்புச் சாயம் பூசப்பட்ட உலர் செங்குத்துக் குழாய் இருக்கும்.

அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நீரழுத்தம் குறைந்ததால் தீப்பிடித்த வீடு இருந்த தளத்திற்குத் தண்ணீரைச் சரிவரக் கொண்டுசெல்ல முடியாமல் போனதாக ஊடகங்களின் கேள்விகளுக்குச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) பதிலளித்தது.

ஜூலை 31 இரவு 11.10 மணியளவில் கிளமெண்டி அவென்யூ 4, புளோக் 309ன் எட்டாவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் தீப்பற்றியது. வீட்டில் இருந்தவர் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தார். காயமடைந்த தீயணைப்பாளர்கள் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

செங்குத்துக் குழாயில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பாளர்கள் உடனடியாகத் தரைத்தளத்திலிருந்த தீயணைப்பு வாகனத்திலிருந்து படிக்கட்டு வழியாகப் பாதிக்கப்பட்ட தளத்திற்கு நேராக வளைகுழாய் (hose) வழியாக நீரைக் கொண்டுசென்று தீயை அணைத்தனர்.

தீயணைப்பு நடவடிக்கையின்போது உலர் செங்குத்துக் குழாயின் இணைப்பான் ஒன்றின் பிடி விலகியதே நீரழுத்தம் குறைய காரணம் என அறியப்படுவதாக முதற்கட்ட ஆய்வறிக்கையைச் சுட்டி, ஹாலந்து - புக்கிட் பாஞ்சாங் நகர மன்றம் தெரிவித்தது.

பின்னர் அக்கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் ஞாயிற்றுக்கிழமை காலை குடிமைத் தற்காப்புப் படை அந்த உலர் செங்குத்துக் குழாய் அமைப்பைச் சோதித்துப் பார்த்தது என்றும் நகர மன்றம் குறிப்பிட்டது.

அவ்வமைப்பு முழுமையாக இயங்குநிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மேலதிகச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தனது நிர்வாகத்தின் கீழுள்ள மற்ற புளோக்குகளிலும் அத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர மன்றம் தெரிவித்துள்ளது.

Read Entire Article