கடைகளுக்கு வரும் ஜோகூர் மக்களின் போக்கை மாற்றிய புகைமூட்டம்

57 minutes ago 1

ஜோகூர் பாரு: புகைமூட்டம் ஜோகூர் கடைகளுக்கு வந்து செல்வோரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தைகளிலோ கடைகளிலோ அதிக நேரம் செலவிட்டு, பொருள்களைப் பார்த்து வாங்கும் வழக்கத்திலிருந்து பலரும் மாறியுள்ளனர்.

வேகமாக வந்து, தேவையானவற்றை வாங்கியதும் திரும்பிச் செல்லும் பழக்கத்திற்கு வாடிக்கையாளர்கள் மாறிவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீடிக்கும் எல்லைதாண்டிய புகைமூட்டம், மக்களை வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்துள்ளதுடன், கடைக்காரர்களின் வருமானத்தையும் பாதித்துள்ளது.

தெற்கு ஜோகூர் சிறு மற்றும் நடமாடும் வியாபாரிகள் சங்கத் தலைவர் யோ பூன் சூன் கூறுகையில், புகைமூட்டச் சூழல் பயனீட்டாளரின் போக்கை மாற்றியமைத்துள்ளது என்றார்.

“இப்போதெல்லாம், மக்கள் காலை மற்றும் இரவுச் சந்தைகளுக்கு வந்து, முன்புபோல் நிதானமாகப் பார்க்காமல், தேவையானதை மட்டும் வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக, மூத்தோர் மற்றும் சிறு குழந்தைகளை வைத்துள்ளோர் இப்படிச் செய்கிறார்கள்.

“எங்கள் சங்கத்தின்கீழ் உள்ள கிட்டத்தட்ட 1,000 வியாபாரிகள், இந்தக் குறைந்த மக்கள் நடமாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

சந்தைகளையே நம்பித் தங்களின் வாழ்வாதாரம் இருப்பதால், வியாபாரிகளால் தற்காலிகமாகக் கூடத் தொழிலை நிறுத்த முடியாது என்று திரு யோ கூறினார்.

வரவிருக்கும் ஆண்டின் ஜோகூர் ஜெயா சீனா புத்தாண்டுப் பெருவிழாவையும் இந்தப் புகைமூட்டம் பாதிக்கக்கூடும் என்று அவர் கவலை தெரிவித்தார். அந்தப் பெருவிழாவை சிறப்பாக நடத்த வியாபாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த விழா பொதுவாகப் பண்டிகைக் காலப் பொருள்களுக்கான ஒரே இடமாக அமைந்து, வியாபாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள், சுற்றுப் பயணிகள் போன்றோரைக் கவரும்.

ஆனால், மோசமான காற்றுத் தரம் நீடித்தால், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் வருகையும் குறையக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜோகூர் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் கூறுகையில், அக்டோபர் 20ஆம் தேதி இரண்டு இடங்களில் செயற்கை மழைப்பொழிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.

புகைமூட்டத் துகள்களின் அடர்த்தியைக் குறைக்க மழைப்பொழிவு உதவும்.

Read Entire Article